2015-09-07 17:07:00

உள்ளத்தைத் திறக்க மறுப்பது பாவச் செயலாகும் - திருத்தந்தை


செப்.07,2015. செவி கேளாதவரும், பேச்சுத் திறனற்றவருமான ஒருவரை இயேசு குணப்படுத்திய புதுமை குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதுமையானது, இயேசு எவ்விதம் நம்மோடு தொடர்பை உருவாக்குகிறார் என்பதன் அடையாளமாக உள்ளது என்று கூறினார்.

இஞ்ஞாயிறு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள, கேட்கும் திறன் மற்றும் பேச்சுத் திறன் இரண்டும் அற்ற நபர், கடவுளில் விசுவாசமற்ற ஒருவரது பயணத்தின் அடையாளமாக இருப்பதாகவும், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, புரிந்துகொள்ள முடியாதவராக அவர் இருந்ததை, அவரின் காதுகேளாமை உணர்த்துகிறது என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தன்னிடம் கொண்டுவரப்பட்ட நபரை, கூட்டத்திலிருந்து இயேசு தனியே அழைத்துச் சென்றது, இறைவார்த்தை, பிற இரைச்சல்கள் ஏதுமின்றி, அமைதியில் செவிமடுக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

இன்றைய உலகில் பிறருக்கு தங்கள் உள்ளங்களைத் திறக்க மறுக்கும் மனிதர்களால், குடும்பங்களால், தம்பதியர்களால் ஏற்படும் விளைவுகளையும் சுட்டிக்காட்டி, அத்தகைய நிலைகள், பாவச் செயல்களாகும் என்றும், தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.