2015-09-07 17:01:00

இளையோரிடையே பிறரன்புப் பணி ஆர்வத்தைத் தூண்டுங்கள்


செப்.07,2015. அமைதியையும் நீதியையும் அன்புகூரும் போர்த்துக்கல் மக்களுக்கு, தலத்திருஅவை, தன் செபத்திலும், பிறரன்பிலும் வேரூன்றிய சாட்சிய வாழ்வு மூலம் சேவையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

5 ஆண்டிற்கு ஒருமுறை தலத்திருஅவை ஆயர்கள் உரோம் நகர் வரும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி வந்திருந்த போர்த்துக்கல் ஆயர்களிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரிடையே பிறரன்புப் பணிகளுக்கான ஆர்வத்தை தூண்டவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஒவ்வொரு பங்குதளத்திலும், மக்களிடையே மறைப்பணிக் கடமைகளை வலியுறுத்த வேண்டிய தேவையையும் போர்த்துக்கல் ஆயர்களிடம் முன்வைத்த திருத்தந்தை, இளையோர், கிறிஸ்தவ மறையை விட்டு ஒதுங்கியிருத்தல், மற்றும், ஒழுங்கற்ற குடும்ப நிலைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இன்றைய இளையோரின் நிலை குறித்தே, தன் உரையில் அதிகம் அதிகமாக குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரை வழி நடத்தி, துணை நிற்க வேண்டிய திருஅவையின் கடமை குறித்தும் வலியுறுத்தினார்.

மேலும், இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில், ' அனைத்துக் குடும்பங்களுக்காகவும், குறிப்பாக வேலைவாய்ப்பற்ற நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்காக அன்னைமரியிடம் வேண்டுவோம்’ என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.