2015-09-05 16:27:00

புலம்பெயர்ந்தவர்களுள் பெரும் பகுதியினர் மத்திய கிழக்கில்


செப்.05,2015. உலகில் இடம்பெறும் சண்டையால் மத்திய கிழக்கில், குறிப்பாக, துருக்கி, லெபனான், ஈராக், ஜோர்டன் ஆகிய நாடுகளில் உலகின் புலம்பெயர்ந்த மக்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றனர் என்று ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிவித்தது.

புடாபெஸ்ட் இரயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த மக்கள் நிரம்பியுள்ள நிலையில், இவர்களை ஏற்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளதையொட்டி, இந்நாடுகள் குறைந்தது இரண்டு இலட்சம் புலம்பெயர்ந்த மக்களை ஏற்குமாறு ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் உயர் இயக்குனர் Antonio Guterres அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று உலகில் ஏறக்குறைய 5 கோடியே 29 இலட்சம் மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் தேடுகின்றனர் என்றும், இம்மக்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார் Guterres.

இதற்கிடையே, சிரியா நாட்டு புலம்பெயர்ந்த மக்களுக்காக தங்களது நாட்டுக் கதவு எப்போதும் திறந்து இருப்பதாக ஆர்ஜென்டினா தெரிவித்துள்ளது.

இது குறித்துப் பேசிய அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர் அனிபெல் ஃபெர்னாண்டர்ஸ், "கடந்த ஆண்டு முதல் சிரியா நாட்டு அகதிகள் இங்கு வருவதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என்றும், சிரியா நாட்டினரை நாங்கள் எங்கள் நாட்டு கலாச்சாரத்தின்படி வரவேற்போம்" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தென் அமெரிக்க நாடுகளில் நூற்றுக்கும் குறைவான சிரியா நாட்டு மக்களே முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.