2015-09-05 16:16:00

புலம்பெயர்ந்த இளையோர்க்கு அமைதியான எதிர்காலம் தேவை


செப்.05,2015. புலம்பெயர்ந்த இளையோர் எதிர்காலத்தைக் கொண்டிருப்பதற்கு, புலம்பெயர்ந்தவர் நிலை அல்ல, ஆனால் அமைதியான வாழ்வே அவர்களுக்கு அவசியம் என்று மெல்கித்தே முதுபெரும் தந்தை 3ம் கிரகரி லஹாம் அவர்கள் தெரிவித்தார்.

துருக்கி நாட்டு Bodrum நகர் கடற்கரையில் சிரியா நாட்டு குர்த் இனக் குழந்தை Aylan இறந்து கிடந்த படத்தைப் பார்த்து இந்த உலகமே கண் கலங்கியது, இத்தகைய மனக்கவலைதரும் நிகழ்வுகள் மேலும் இடம்பெறாதிருப்பதைத் தடுப்பதற்கு உலக சமுதாயம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு விண்ணப்பித்துள்ளார் முதுபெரும் தந்தை லஹாம்.

மத்திய கிழக்கில் அமைதி, பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு ஆவன செய்யுமாறு உலக சமுதாயத்திடம் விண்ணப்பிப்பதாகத் தெரிவித்துள்ள முதுபெரும் தந்தை லஹாம் அவர்கள், தற்போது புலம்பெயர்ந்தவர்களை ஏற்பது அல்ல, ஆனால், மத்திய கிழக்கில் சண்டையை நிறுத்துவதே முக்கியமாக ஆற்றப்பட வேண்டியது என்று கூறியுள்ளார்.

மேற்கத்திய நாடுகள், அரபு நாடுகள், இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு என அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் முதுபெரும் தந்தை லஹாம்.

சிரியாவில் 2011ம் ஆண்டுக்கு முன்னர் 11 இலட்சத்து 70 ஆயிரமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது 4 இலட்சத்து 50 ஆயிரமாகவும், ஈராக்கில் 10 இலட்சத்துக்கு மேல் இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3 இலட்சத்துக்கும் குறைவாகவுமே உள்ளன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.