2015-09-05 16:03:00

கென்ய நாட்டுத் திருத்தூதுப்பயணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


செப்.05,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கென்ய நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தை ஏற்றுள்ளார் என்பதை, கென்ய ஆயர்களின் பெயரால் தான் மகிழ்வுடன் அறிவிப்பதாக அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Philip Anyolo அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கென்ய நாட்டுத் திருத்தூதுப் பயணம் ஓர் அரசுப் பயணமாக அமையும் என்றும், இப்பயணத்திற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு அதிகாரிகளுக்கு ஆயர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார் ஆயர் Anyolo.

வருகிற நவம்பர் 25ம் தேதி நைரோபிக்கு வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நகரில் இரு நாள்கள் தங்கி திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார் என்றும், இப்பயணம் சிறந்த முறையில் அமைவதற்கு கிறிஸ்தவர்கள் செபிக்குமாறும் கேட்டுள்ளார் ஆயர் Anyolo.

கென்ய நாடு இறைவனின் அன்பை அடித்தளமாகக் கொண்டு, நீதியும் அமைதியிலும் கட்டப்படுவதற்குச் செபிக்குமாறும் கேட்டுள்ள ஆயர் Anyolo அவர்கள், நைரோபியிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் சேரிகளைப் பார்வையிடுவது உட்பட பல்வேறு நிகழ்வுகளையும் திருத்தந்தை நிகழ்த்துவார் என்றும் கூறியுள்ளார்.

உகாண்டா நாட்டுத் தலைநகர் Kampala, மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் தலைநகர் Bangui ஆகிய நகரங்களிலும் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.