2015-09-05 15:52:00

அமெரிக்கரின் வாழ்வுப் பயணத்தில் உதவ விரும்புகிறேன்


செப்.05,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும்போது அந்நாட்டு மக்களோடு மிக நெருக்கமாக இருந்து அவர்களின் வாழ்வுப் பாதையில் அவர்களுக்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, அந்நாட்டின் சிகாகோ, லாஸ் ஆஞ்சலெஸ், டெக்சஸ் ஆகிய மூன்று நகரங்களில் மூன்று வகையான மக்களுடன் செயற்கைக்கோள் வழியாக ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

சிகாகோ  நகரில் ஏழை மாணவர்க்காக இயேசு சபையினர் நடத்திவரும் பள்ளியைச் சேர்ந்த மக்கள், லாஸ் ஆஞ்சலெஸ் நகரில் வீடற்ற மக்கள், மெக்சிகோ எல்லைப் புறத்திலுள்ள டெக்சஸ் நகரில் குடியேற்றதாரர் என மூன்று குழுவினருடன் உரையாடல் முறையில் “ABC” ஊடகம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கடந்த திங்களன்று பதிவு செய்தது. இந்நிகழ்ச்சி இவ்வெள்ளி மாலையில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

சமுதாயத்தில் நாம் அனைவரும் நட்புடன் வாழ படைக்கப்பட்டுள்ளோம், நாம் அனைவரும் பிறரின் சுமைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறோம், நாம் ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்ற உணர்வை இதயத்தில் கொண்டிருக்க வேண்டும், வன்முறை வழியாக இதிலிருந்து தப்பிச் செல்வது எவ்விதத்திலும் உதவி செய்யாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கேள்வி பதில் நிகழ்வாக நடந்த இதில் ஒவ்வொருவரின் கேள்விக்குப் பதிலளித்த    திருத்தந்தை, சிறுவனாக அல்லது எந்த நிலையிலும், ஒருவர் தான் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுப்பதன் வழியாகவும், அவற்றை அளிக்கும் முறையிலும் தான் வாழும் மக்களுடன் நெருக்கமாக வாழ இயலும் என்றும் கூறினார்.

மக்களுக்கு நெருக்கமாகச் செல்லும்போது அவர்களைப் புரிந்து கொள்வதும், அவர்களின்  வாழ்வுப் பயணத்தில் உதவுவதும் எளிதாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.