2015-09-05 16:09:00

அனைத்துலக இளம் துறவியர் மாநாடு செப்டம்பர் 15-19


செப்.05,2015. இம்மாதம் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை உரோம் நகரில் நடைபெறவிருக்கும் அனைத்துலக இளம் துறவியர் மாநாட்டில், ஈரான், பிலிப்பைன்ஸ், ஐவரி கோஸ்ட், ஜிம்பாபுவே உட்பட உலகின் பல நாடுகளிலிருந்து ஏறக்குறைய நான்காயிரம் இளம் துறவியர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“உலகை விழித்தெழச் செய்யுங்கள்:நற்செய்தி, இறைவாக்கு, நம்பிக்கை” என்ற தலைப்பில் கத்தோலிக்கத் திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு நிகழ்வுகளின் ஒரு கட்டமாக, உரோம் நகரில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழும் இளையோர் மாநாடு நடைபெறவிருக்கின்றது.

இம்மாநாடு குறித்து பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய துறவியர் திருப்பேராயம் இம்மாநாட்டின் முக்கிய நோக்கத்தையும் விளக்கியது.

விவிலியம், இறையியல்-அருங்கொடை, திருஅவை ஆகியவை வழியாக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் அடிப்படை கூறுகள் குறித்த சிந்தனைகள் வழங்குவது, பயிற்சி காலத்தில் எதிர்கொள்ளும் வாழ்வின் எதார்த்தங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பகிர்தல், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் அழகைக் கொண்டாடுதல், அதற்குச் சான்று பகர்தல் போன்றவை இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் என பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.