2015-09-04 15:15:00

திருத்தந்தை: புறம்கூறும் மனிதர்கள், தீவிரவாதிகளை ஒத்தவர்கள்


செப்.04,2015. பிரிவுகளை விதைப்பது திருஅவையில் ஒரு நோயாக உள்ளது என்றும், புறம்கூறும் மனிதர்கள், குண்டுகளை வீசிவிட்டுச் செல்லும் தீவிரவாதிகளை ஒத்தவர்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், அமைதியை நிலைநாட்ட இயேசு இரத்தம் சிந்தினார் என்று புனித பவுல் அடியார் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு, தன் மறையுரை வழங்கினார், திருத்தந்தை.

போரையும், வெறுப்பையும் பற்றிய செய்திகளையே ஒவ்வொருநாளும் கேட்டுவரும் நாம், நம் பங்குக்கு, ஒப்புரவையும், அமைதியையும் கொணர்கிறோமா என்ற கேள்வியை எழுப்புவது அவசியம் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

வதந்திகளைப் பரப்புவதிலும், புறம் கூறுவதிலும் ஈடுபடும் கிறிஸ்தவர்கள், குண்டைவீசி மற்றவர்களைக் கொன்றுவிட்டு, அங்கிருந்து அகன்றுவிடும் தீவிரவாதிகளுக்கு ஒப்பானவர்கள் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

ஒருவர், தன் வாழ்நாள் முழுவதும் ஒப்புரவை வளர்க்கும் ஒரே ஒரு பணியை  செய்திருந்தாலும் போதும், அவரை, புனிதராக உயர்த்தலாம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையப் பண்பில் வளர, ஆழ்ந்த மனமாற்றம் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்திக் கூறினார்.

மேலும், ‘உயிர்களையும், ஆன்மாக்களையும் அதிகமாகக் கொல்லும் போர், அனைத்து வறுமைக்கும் தாயாக விளங்குகிறது’ என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.