2015-09-04 15:25:00

கருணையை மையமாகக் கொண்ட இறையியல் - திருத்தந்தை


செப்.04,2015. செபமும், வாழ்வும் இணைந்திருப்பதுபோல, திருஅவை படிப்பினைகளும், மேய்ப்புப்பணியும் இணைந்திருக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு காணொளி செய்தியில் கூறினார்.

அர்ஜென்டீனா நாட்டின், புவனோஸ் அயிரஸ் நகரில், இவ்வியாழனன்று நிறைவடைந்த ஒரு பன்னாட்டு இறையியல் மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த ஒரு காணொளி செய்தியில், இறையியலாளர், ஓர் இறைவாக்கினராகவும், விசுவாசியாகவும் இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

அர்ஜென்டீனா கத்தோலிக்கப் பல்கலைகழகத்தின் இறையியல் துறை, தன் 100வது ஆண்டைச் சிறப்பிக்கும் வேளையில், இப்பல்கலைக் கழகத்தின் வேந்தரான, கர்தினால் மாரியோ அவுரேலியோ போலி அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், இந்த நூற்றாண்டு கொண்டாட்டம், அர்ஜென்டீனா நாட்டின் கத்தோலிக்க வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று எடுத்துரைத்தார்.

இந்த நூற்றாண்டு நிறைவு, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவினை ஒட்டி வந்திருப்பது, கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் இணைப்பதற்கு, நமக்கு  அழைப்பு விடுக்கிறது என்று திருத்தந்தை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காயப்பட்ட உலகைக் குணமாக்கும் வண்ணம், 'போர்க்கள மருத்துவமனை'யைப் போலப் பணியாற்றிவரும் திருஅவை, வார்த்தைகளால் வெளிப்படுத்தும் கருத்துக்களே, இறையியலாக உருவெடுக்கின்றன என்று கூறியத் திருத்தந்தை, கொள்கைத் திரட்டு, ஆன்மீகம், சட்டங்கள் என்று பல துறைகளைக் கொண்டுள்ள இறையியல், கருணையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று தன் செய்தியில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.