2015-09-04 15:53:00

எல்லைப் பிரச்சனை குறித்து, கொலம்பியா, வெனிசுவேலா ஆயர்கள்


செப்.04,2015. கொலம்பியா, வெனிசுவேலா நாடுகளின் அரசுகள், இருநாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, தங்கள் எல்லைப் பிரச்சனைக்கு, தகுந்த தீர்வைக் காணவேண்டும் என்று, இவ்விரு நாடுகளின் ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கொலம்பியாவின் பொகோட்டோ நகரில், இருநாடுகளின் ஆயர்கள் மேற்கொண்ட ஓர் உயர் மட்டக் கூட்டம் இவ்வியாழனன்று நிறைவுற்றபோது, ஆயர்கள் இந்த விண்ணப்பத்தை இரு நாட்டு அரசுத் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும், பிரச்சனைகளையும் பெரிதுபடுத்தாமல், ஒற்றுமை முயற்சிகளை வளர்ப்பது, இரு நாட்டு மக்களுக்கு, குறிப்பாக, இரு நாடுகளிலும் வறுமையால் துன்புறும் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று, ஆயர்களின் ஒருங்கிணைந்த விண்ணப்பம் கூறுகிறது.

கொலம்பியா, வெனிசுவேலா நாடுகளின் ஆயர்கள் விடுத்துள்ள இந்த விண்ணப்பத்தில் கையொப்பம் இட்ட இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் ரூபன் சலசார் கோமஸ் (Rubén Salazar Gómez) அவர்கள், நாடுகளின் எல்லை என்பது பிரிவைக் காட்டிலும், இரு மக்களின் சந்திப்பை வலியுறுத்தும் கோடாக அமைய வேண்டும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.