2015-09-03 15:34:00

துறவு சபைகளின் தனி வரம், அருங்காட்சியகப் பொருள் அல்ல


செப்.03,2015. ஒவ்வொரு துறவு சபைக்கும் வழங்கப்பட்டுள்ள தனி வரம், அருங்காட்சியகத்தில் வைத்து பாதுக்காக்கப்பட வேண்டிய காட்சிப் பொருள் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘Schönstatt அருள் பணியாளர்கள்’ என்ற துறவு சபையைச் சேர்ந்தவர்களிடம் கூறினார்.

இத்துறவு சபையினரின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளை, இவ்வியாழன் மதியம் வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை, துறவு சபைகளுக்கு வழங்கப்படும் தனிவரத்திற்கு விசுவாசமாய் இருப்பது என்பதை, வடிகட்டிய நீரை பாட்டிலில் பாதுகாப்பது என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், இவ்வுலக எதார்த்தங்களுடன் கலக்கவேண்டிய ஒரு சவாலாக நோக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

அருள் பணியாளர் என்ற நிலையில் வாழ்வோர், செப வாழ்வையும், பணி வாழ்வையும் தகுந்த அளவில் கலந்து, வாழவேண்டுமே தவிர, இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராக மோதும்படி வாழ்வது அல்ல என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

செபத்தில் இறைவனின் குரலைக் கேட்பதுபோல், மக்களின் குரலையும் கேட்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று, திருத்தந்தை எடுத்துரைத்தார்.

1914ம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின் Schönstatt என்ற இடத்தில் துவக்கப்பட்ட ‘Schönstatt அருள் பணியாளர்கள்’ என்ற துறவு சபை, சென்ற ஆண்டு, தன் நூற்றாண்டைக் கொண்டாடியபோது, தன்னைச் சந்தித்ததையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தச் சந்திப்பின்போது நினைவுகூர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.