2015-09-03 11:19:00

கடுகு சிறுத்தாலும் – இளைய தலைமுறையின் ஒளிதீபம்


புகழ்பெற்ற பெல் நிறுவனத்தில் பொறியாளராக தற்போது வேலைபார்ப்பவர் 29 வயது அகில் குப்தா. உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரைச் சேர்ந்த இவர், சி.பி.எஸ்.சி பள்ளியில் சிறந்த மாணவராய் இருந்தார். இவர், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் கணிதம், வேதியியல், கணிப்பொறியியல் ஆகியவற்றில் 97 விழுக்காடு மதிப்பெண் பெற்றார். அதேநேரம், இயற்பியல் பாட செய்முறைத் தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு மொத்தம் 13 மதிப்பெண்களுடன் தோல்வி என்று தேர்வு முடிவுகள் வெளிவந்தன. இதனால் குப்தாவின் பொறியியல் கனவு பொசுங்கிப் போனது. குப்தாவின் பெற்றோர்கள் அலகாபாத் சி.பி.எஸ்.சி.யின் உயர் வட்டார அலுவலர்களைச் சந்தித்தனர். டெல்லியில் இருக்கும் தேர்வாணைய இயக்குனருக்குக் கடிதம் எழுதி தங்களின் நிலையை விளக்கினர். அடுத்த மாதத்தில் மறுகூட்டல் முடிவு வந்தது. 'தங்களிடம் எந்தத் தவறும் இல்லை; இயற்பியல் செய்முறைத் தேர்வில் 70 மதிப்பெண்ணுக்கு 13 தான்' என, சி.பி.எஸ்.சி. கையை விரித்தது. ஆனால் அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருந்த சிறுவன் குப்தா, தனக்கு நேர்ந்த நிலையை விளக்கி அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். குடியரசுத் தலைவரின் மாளிகையில் இருந்து உடனே பதில் கடிதம் வந்தது. அதில் குப்தாவின் பிரச்சனையைப் பார்க்கக் கோரி, மத்திய மனிதவள அமைச்சகத்தின் செயலாளருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குள்ளாகவே, அவர்களுக்கு சி.பி.எஸ்.சி.யிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட கடிதம் வந்தது. விடைத்தாள் திருத்தலில் தவறு நேர்ந்திருப்பதாகவும், குப்தா 70க்கு 55 மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாகவும் கூறியது. திருத்தப்பட்ட மறுகூட்டல் மதிப்பெண்ணோடு, குப்தா 85 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றார். பள்ளியில் மட்டுமல்லாது, ராம்பூர் மாவட்டத்திலேயே முதலிடமும் குப்தாவுக்குக் கிடைத்தது. அப்துல் கலாம் அவர்கள் பற்றிப் பேசிய குப்தா, என்னுடைய வாழ்க்கை எப்போதும் அவருக்கு கடன்பட்டிருக்கிறது, எனது வாழ்வின் விடிவெள்ளி அவர், மனிதர் தனது அர்ப்பணிப்பால் மட்டுமே, மிக உயர்ந்த சாதனைகளைச் செய்ய முடியும் என்பதற்கு அவரின் வாழ்க்கையே சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.