2015-09-03 16:17:00

ஒடிசா கிறிஸ்தவர்களின் 'மறைசாட்சிகள் தினம்'


செப்.,03,2015. 2008ம் ஆண்டு இந்தியாவின் கந்தமால் மாவட்டத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான படுகொலைகளில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிக்கும் நோக்குடன் 'மறைசாட்சிகள் தினம்' ஒன்றை உருவாக்கியுள்ளனர், ஒடிசா மாநில ஆயர்கள்.

கடந்த 7 ஆண்டுகளாக, இத்தினம், ‘வன்முறைகளுக்கு பலியான கிறிஸ்தவர்களின் நினைவு தினம்’ என சிறப்பிக்கப்பட்டுவந்த வேளையில், தற்போது, இதற்கு பதிலாக, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் மாதத்தில் 'மறைசாட்சிகள் தினம்' சிறப்பிக்கப்படும் எனவும், எந்தத் தேதியில் இத்தினத்தைச் சிறப்பிப்பது என்பது குறித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஆலோசனை நடத்தி, பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார் ஒடிசா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஜான் பார்வா.

கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக 2008ம் ஆண்டு, இந்து தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மக்களைக் கௌரவிக்கும் விதமாக, அவர்களை மறைசாட்சிகளாக ஏற்று, இந்த நாளை ஒடிசா தலத்திருஅவை உருவாக்குவதாக அறிவித்தார், பேராயர்.

பீகாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மறைசாட்சிகள் தினக் கொண்டாட்டங்கள், நாடு முழுவதும் இடம்பெற வேண்டும் என இந்திய ஆயர் பேரவையில் விண்ணப்பம் ஒன்றை முன்வைக்க உள்ளதாகவும் பீகார் ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

2008ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் பீகாரின் கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்ட வன்முறை நடவடிக்கைகளில், 90க்கும் மேற்பட்ட‌ கிறிஸ்தவர்கள் கொல்லப்படடனர், 56,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் என்று Fides செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.