2015-09-03 16:06:00

உதவி தற்கொலை சட்டமாவதை எதிர்க்கும் கர்தினால் நிக்கோல்ஸ்


செப்.03,2015. உதவிசெய்யப்படும் தற்கொலை என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒரு சில மனித உயிர்கள் வாழத் தகுதியற்றவை என்பதைச் சொல்லாமல் சொல்வதற்கு அது சமமாகும் என்று, இங்கிலாந்து கர்தினால், வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

உதவிசெய்யப்படும் தற்கொலையை  அங்கீகரிக்கும் வகையில், சட்டமொன்றை உருவாக்க, பிரித்தானிய பாராளுமன்றம் முயன்றுவரும் வேளையில், இந்த முயற்சியைத் தடை செய்ய, கத்தோலிக்கர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

"தீங்கு விளைவிக்க வேண்டாம்" என்பது, மருத்துவ உலகின் அடிப்படை கொள்கையாக இருக்கும் வேளையில், இத்தகைய ஒரு சட்டத்திற்கு, மருத்துவ உலகம் எதிர்ப்பு தெரிவித்து வருவதையும், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாதம் 11ம் தேதி முதல், பிரித்தானிய பாராளுமன்றத்தில் உதவிசெய்யப்படும் தற்கொலை குறித்த விவாதங்கள் மீண்டும் தொடரப்படும் நிலையில், கத்தோலிக்கர்கள், இந்த விவாதத்தை முறியடிக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.