2015-09-02 16:08:00

பங்களாதேஷில் 'இறைவா உமக்கே புகழ்' திருமடல் கருத்தரங்கு


செப்.02,2015. இயற்கையைப் பாதுகாக்க, அவரவர் தங்கள் மதத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றை பின்பற்றினால், திருத்தந்தை தன் திருமடல் வழியே வழங்கியுள்ள எண்ணங்கள் நிறைவேற வழியுண்டு என்று, டாக்கா பேராயர், பேட்ரிக் டி'ரொசாரியோ (Patrick D'Rozario) அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' திருமடலையும், 'படைப்பைப் பாதுக்காக்கும் உலக செபநாளை'யும் ஒட்டி, பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் டி'ரொசாரியோ அவர்கள், ஒவ்வொரு மதமும், படைப்பின் மீது அக்கறை கொள்வதை வலியுறுத்துகின்றது என்று எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், இந்துக்கள் என்ற பல மதத்தவரும் கலந்துகொண்ட இந்தக் கருத்தரங்கில், அழிந்துவரும் நம் இயற்கையைக் குறித்த பல கவலைகள் பேசப்பட்டன என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

படைப்பின் சிகரமெனக் கருதப்படும் மனிதர்கள், படைப்பைக் காப்பதற்குப் பதில், அதை அழிப்பது நமது உயர் நிலைக்கு ஓர் இழுக்கு என்று, இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட அருள்பணி Topan D'Rozario அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.