2015-09-02 16:24:00

இரு இந்தியர் உட்பட, ஐவருக்கு 2015ம் ஆண்டின் மகசேசே விருது


செப்.02,2015. இன்றைய உலகின் நாயகர்களான நீங்கள், பிலிப்பின்ஸ் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகிறீர்கள் என்று, பிலிப்பின்ஸ் அரசுத் தலைவர், Benigno Aquino அவர்கள், ஆகஸ்ட் 31, இத்திங்களன்று, மகசேசே விருது வழங்கும் விழாவில் கூறினார்.

'ஆசியாவின் நொபெல் விருது' என்று வழங்கப்படும் மகசேசே விருது, 2015ம் ஆண்டுக்கென, இரு இந்தியர் உட்பட, ஐவருக்கு வழங்கப்பட்டபோது, அவர்களின் துணிவையும், தளரா முயற்சியையும் அரசுத் தலைவர் Aquino அவர்கள் பாராட்டினார்.

தருகின்ற கலாச்சாரம் தழைத்து வளரும் என்ற கருத்தை மையப்படுத்தி, Goonj என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ள Anshu Gupta, மற்றும், வனத்துறையில் வேரூன்றியிருந்த ஊழலை எதிர்த்துப் போராடிய அரசு அதிகாரி, Sanjiv Chaturvedi ஆகிய இரு இந்தியர்கள்,  2015ம் ஆண்டு மகசேசே விருது பெற்ற ஐவரில் அடங்குவர்.

இவ்விருவரைத் தவிர, லாவோஸ், பிலிப்பின்ஸ், மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவரும் இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்று, UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

பிலிப்பின்ஸ் நாட்டின் மூன்றாவது அரசுத் தலைவராகப் பணியாற்றிய Ramon Magsaysay அவர்களின் நினைவாக, 1958ம் ஆண்டு முதல், ஆசியாவில் சமுதாயச் சிந்தனையுடன் பணியாற்றியுள்ள தலைசிறந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.