2015-09-02 16:18:00

இந்தியாவில் ‘படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாள்’ கூட்டம்


செப்.02,2015. செப்டம்பர் 1, இச்செவ்வாயன்று, படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாள், கத்தோலிக்கர்களால் முதல்முறையாகச் சிறப்பிக்கப்பட்டபோது, இந்தியாவில், பல்சமய வழிபாட்டுக் கூட்டம், ஹைதராபாத் நகரில் நடைபெற்றது என்று, Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இந்து, இஸ்லாம், மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த வழிபாட்டில், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களால் எழுதப்பட்ட 'சூரியனின் திருப்புகழ்' என்ற செபமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலின் இறுதியில் எழுதியுள்ள செபமும் கூறப்பட்டன.

திருத்தந்தையின் திருமடலால் உந்தப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கென தென் கொரியாவின் தலைநகர் சோல் நகரில் இளையோர், ஓர் இயக்கத்தைத் துவக்கியுள்ளனர் என்று, Fides நிறுவனத்தின் மற்றொரு செய்தி கூறுகிறது.

கைகளையும், முகத்தையும் துடைப்பதற்கு, காகிதத் துவாலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, துணியாலான கைக்குட்டைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை, மரங்களைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு வெளிப்பாடாக, மக்கள் மேற்கொள்ளவேண்டும் என்று இந்த இளையோர் இயக்கம், இணையதளம் வழியே,  விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.