2015-09-02 16:30:00

அமெரிக்க மக்களோடு திருத்தந்தை கணணி வழி உரையாடல்


செப்.02,2015. தங்களுக்கே உரிய வரலாறு, கலாச்சாரம், புண்ணியங்கள், மகிழ்வு, கண்ணீர் என்ற அனைத்தையும் கொண்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு குடிமக்களைச் சந்திப்பதை, நான் முக்கியமாகக் கருதுகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

செப்டம்பர் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் ஒரு முன்னோடி முயற்சியாக, அங்குள்ள மூன்று நகரங்களின் மக்களோடு, கணணி வழி உரையாடலை, இத்திங்களன்று திருத்தந்தை மேற்கொண்டார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தொலைக்காட்சி நிலையம், ABC செய்திருந்த ஓர் ஏற்பாட்டின் வழியே, சிக்காகோ நகரில் வறுமைப்பட்டவர்களுக்கென இயேசு சபையினரினால் நடத்தப்படும் Cristo Rey என்ற பள்ளியின் மாணவர்கள், அமெரிக்கா-மெக்சிகோ ஆகிய  நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப்பகுதியில் McAllen என்ற ஊரில் உள்ள ஒரு பங்கு மக்கள், லாஸ் ஆஞ்ஜெலஸ் நகரில் வீடற்றோர் குழுவைச் சார்ந்தவர்கள் ஆகியோருடன் திருத்தந்தை நேரடியாகப் பேசினார்.

வத்திக்கான் வானொலியும், வத்திக்கான் தொலைக்காட்சி நிலையமும், பதிவு செய்த இந்த உரையாடலில், மூன்று நகர்களைச் சேர்ந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பானிய மொழியிலும், சில வேளைகளில் ஆங்கிலத்திலும் பதில் அளித்தார்.

திருத்தந்தையுடன் நடைபெற்ற இந்த உரையாடல், "திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மக்களும்" என்ற தலைப்பில், செப்டம்பர் 4, இவ்வெள்ளியன்று, இரவு 10 மணிக்கு, ஒரு மணி நேர நிகழ்வாக ஒளிபரப்பாகும் என்று, ABC தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.