2015-09-02 16:13:00

5 ஆண்டுகளில் காசாவில் யாரும் வாழ முடியாது : ஐநா எச்சரிக்கை


செப்.02,2015. மத்திய கிழக்கின் காசா பகுதியில் தற்போது நிலவிவரும் நெருக்கடிகள் நீடித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அப்பகுதி, மக்கள் வாழ இயலாத இடமாக மாறிவிடும் என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் அரசு விதித்துள்ள தடைகள் மற்றும் அண்மைய காலத்தில் அங்கு மேற்கொள்ளப்பட்ட மூன்று இராணுவ நடவடிக்கைகள் காரணமாக காசா பகுதியின் சமூக, மற்றும் பொருளாதாரக் குறியீடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, முன்னேற்றம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா. நிறுவனமான UNCTAD எச்சரித்துள்ளது.

காசா பகுதியை இஸ்ரேல் அரசு கைப்பற்றியபின், ஏறத்தாழ, கடந்த ஐம்பது ஆண்டுகளில், முன்பில்லாத அளவில் நிலைமை மோசமாக உள்ளதாக அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உணவு, உறைவிடம், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாமல் காசா பகுதியில் மக்கள் பலர் வாடுவதாகவும், அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளதாகவும், பொருளாதார உற்பத்தி என்று எதுவுமே இல்லை என்றும் UNCTAD குறிப்பிடுகிறது.

அனைத்துலக நிறுவனங்கள் செய்துவரும் நிதி உதவிகள், காசா பகுதிக்கு நிலைக்கக்கூடிய நெடுங்காலத் தீர்வாக இருக்க முடியாது என்று UNCTAD அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. 

ஆதாரம் : BBC/UNCTAD / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.