2015-09-01 15:46:00

விவிலியத் தேடல் : இறுதித் தீர்ப்பு உவமை – பகுதி - 3


“படைப்பின் பாதுகாவலர்கள் என்று நமக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அழைப்பைப் புதுப்பிக்கும் வகையில், நாம் படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாளில் பங்கேற்போம்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த ஒர் அழைப்பின் அடிப்படையில், செப்டம்பர் 1, இச்செவ்வாயன்று, படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாளை, கத்தோலிக்கர்கள் கடைபிடித்தனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த செபநாள் குறித்து அனுப்பிய மடலில் "இறைவன் நமக்களித்துள்ள படைப்பு என்ற கொடைக்காக நன்றி செலுத்துவதோடு, படைப்பிற்கு எதிராக நாம் புரிந்துவரும் குற்றங்களுக்காக, அவரிடம் மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நாள் நமக்கு உதவட்டும்" என்று எழுதியிருந்தார். திருத்தந்தை அனுப்பிய இவ்வழைப்பு, இரு பாடங்களை எனக்குச் சொல்லித்தந்தது.

ஒன்று, 'படைப்பை பாதுகாக்கும் உலக நாள்' என்று இந்நாளை அழைப்பதற்குப் பதில், 'படைப்பை பாதுகாக்கும் உலக செபநாள்' என்று திருத்தந்தை அறிவித்தார். 'உலக நாள்' என்பது, ஓர் எண்ணத்தை உயர்த்திப் பிடிக்கும் நாள்; 'உலக செபநாள்' என்பதோ, இறைவனை நோக்கி நம் எண்ணங்களை உயர்த்தி, செபிக்கும் நாள். இயற்கையைக் காப்பதற்கு, மனிதர்களாகிய நாம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளுடன், செபமும் தேவை என்பதை நாம் உணரவேண்டும்.

மனிதர்களின் அளவுகடந்த பேராசையால் அழிந்துவரும் இயற்கையை, மனிதர்கள் மனதுவைத்தால் மட்டுமே காக்கமுடியும். இதற்கு, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மனமாற்றம் தேவை. இந்த மனமாற்றத்தை இறைவன் வழங்கவேண்டும் என்ற தேவையை வலியுறுத்தவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் முதல் தேதியை ஒரு ‘செப’ நாளாக அறிவித்திருந்தார். இது, நான் கற்றுக்கொண்ட முதல் பாடம்.

1989ம் ஆண்டு முதல், கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சபையினர், செப்டம்பர் முதல் தேதியை, படைப்பின் பாதுகாப்பிற்கென அர்ப்பணித்து வருகின்றனர். இதை உணர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே நாளை, படைப்பைப் பாதுக்காக்கும் செப நாளாகக் கடைபிடிக்க கத்தோலிக்கத் திருஅவையினருக்கும் அழைப்பு விடுத்தார். இது, எனக்கு இரண்டாவது பாடத்தைச் சொல்லித் தந்தது.

மனிதர்களாகிய நாம், நமக்குள் உருவாக்கியிருக்கும் மதம், மொழி, நாடு, இனம் என்ற பல பிரிவுகளையும் மறந்து, ஒன்றிணைந்து முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே, இவ்வுலகை, இயற்கையை நாம் பாதுகாக்கமுடியும் என்ற பாடத்தையும், ஆர்த்தடாக்ஸ் சபையினரோடு இந்நாளைச் சிறப்பிக்க, திருத்தந்தை வழங்கிய இந்த அழைப்பு எனக்குச் சொல்லித் தந்தது.

மேலும், செப்டம்பர் முதல் தேதி துவங்கி, படைப்பின் பாதுகாவலர் என்று வணங்கப்படும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளாரின் திருநாளான அக்டோபர் 4ம் தேதி முடிய, படைப்பின் காலம் என்று கொண்டாட பல கிறிஸ்தவ சபைகளும், கத்தோலிக்க அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன.

எனவே, செப்டம்பர் 1ம் தேதி முதல், அடுத்துவரும் 35 நாட்களுக்கு, படைப்பின் காலம் என்ற இம்முயற்சிகளுடன் நம்மையும் இணைத்துக் கொள்வோம். நமது எண்ணங்கள், படைப்பின் பாதுகாப்பு நோக்கி திரும்ப, இந்த செபநாள் ஓர் அர்த்தமுள்ள ஆரம்பமாக அமையட்டும். சிறப்பாக, இவ்வாண்டு டிசம்பர் மாதம், காலநிலை மாற்றம் என்ற கருத்தை மையப்படுத்தி,  பாரிஸ் மாநகரில், கூடவிருக்கும் உலக உச்சி மாநாட்டில், படைப்பைக் காப்பது பற்றிய உறுதியான முடிவுகளை உலக அரசுகள் எடுக்கவேண்டும் என்ற மன்றாட்டும், இன்று முதல் நம் உள்ளங்களிலிருந்து எழட்டும்.

படைப்பின் பாதுகாப்பு உலக செபநாளைச் சிறப்பித்த நாம், பாதுகாப்பையும், 'இறுதித் தீர்ப்பு உவமை'யையும் இணைத்து ஒரு தேடலை மேற்கொள்ள முயல்வோம். பாதுகாப்பு என்பது, எல்லா உயிரினங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓர் அடிப்படை உணர்வு. 'பாதுகாப்பு'  என்ற வார்த்தையைக் கேட்டதும், நமது உயிரை, நம்மைச் சார்ந்தவர் உயிரை, நம் உடைமைகளைக் காப்பது என்ற எண்ணங்கள் அதிகம் எழுந்திருக்கும்.

நாம், நமது என்ற குறுகிய வட்டங்களைக் கடந்து, இந்த உலகம் முழுவதையும், படைப்பு அனைத்தையும் காப்பது, மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமை என்ற கருத்து, அண்மைய ஆண்டுகளில் பேசப்பட்டு வருவதை நாம் அறிவோம். செப்டம்பர் முதல் தேதி நாம் கடைபிடித்த 'படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாள்' இந்த எண்ணத்தை மீண்டும் நம் உள்ளங்களில் ஆழப் பதித்திருந்தால் அதுவே, இந்த செபநாளின் வழியே நாம் பெற்ற அருள் என்று கருதமுடியும்.

தற்காப்பு என்பது, அனைத்து உயிரினங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓர் அடிப்படை உணர்வு. தங்கள் உயிருக்கோ, தங்கள் தலைமுறையின் உயிருக்கோ ஆபத்து என்றால், அனைத்து உயிரினங்களும் போராடுவதைக் காண்கிறோம். மனிதர்களுக்கு மட்டும், தங்கள் உயிர், தங்கள் வம்சத்தின் உயிர், என்ற குறுகிய வட்டத்தைத் தாண்டி, அறிமுகமில்லாத அடுத்தவர் உயிரையும் காக்கவேண்டும் என்ற உணர்வும் தரப்பட்டுள்ளது. இந்த உணர்வையே, பிரான்ஸ் நாட்டில், ஓடும் இரயிலில் பயணம் செய்த நால்வர் அண்மையில் வெளிப்படுத்தினர்.

ஆகஸ்ட் 21ம் தேதி, பாரிஸ் நகர் நோக்கி விரைந்துகொண்டிருந்த அதிவிரைவு இரயில் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர், திடீரென பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து, சூழ இருந்தவர்களைச் சுட ஆரம்பித்தார். அதே இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த Spencer Stone, Alek Skarlatos, Anthony Sadler, ஆகிய மூன்று அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த Chris Norman என்பவரும், அம்மனிதரை எதிர்த்துப் போராடி, அவரைக் கட்டிப்போட்டு, மக்களைக் காப்பாற்றினர்.

62 வயதான Norman அவர்கள், தன் மடிக்கணணியுடன் அமர்ந்திருந்தபோது, துப்பாக்கி சப்தம் கேட்டது என்றும், இரயிலின் ஒரு கண்ணாடி சன்னல் உடைந்ததென்றும் கூறினார். அவர் தலையை நிமிர்த்திப் பார்த்தபோது, AK 47 துப்பாக்கியுடன் ஒருவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார். அந்நேரத்தில் தன் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களை, அவர் ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார். அவர் சொன்ன வார்த்தைகள் வாழ்வு, சாவு இவற்றைப் பற்றிய சில எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றன.

"நான் எப்படியும் சாகத்தான் போகிறேன். அதற்குமுன், இவனை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும். இவன் சுடுவதற்குக் காத்துக்கொண்டு, ஓரமாய் அமர்ந்திருப்பதற்குப் பதிலாக, இவனைத் தடுக்கும் முயற்சியில் நான் இறந்தாலும் பரவாயில்லை." என்று, 62 வயது நிறைந்த Norman அவர்கள் கூறினார். மரணம் உறுதி என்று தெரிந்ததும், அதிலும், அர்த்தமற்ற, அநீதியான முறையில் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன், அந்த அநீதியைத் தட்டிக் கேட்கவேண்டும், முடிந்தால், அந்த அநீதியை தடுத்து நிறுத்த வேண்டும்; மரணத்தைச் சந்திப்பதற்கு முன், நல்லதொரு செயலை செய்துவிட்டு இறப்பது மேல் என்ற எண்ணங்கள் எழுவது இயல்புதானே! இந்த பாணியில்தான் Norman அவர்களின் எண்ணங்களும் ஓடின. இவரது எண்ண ஓட்டங்களைப் போலவே மற்ற மூன்று பேரும் எண்ணியதால், இரயில் பயணிகள் உயிர்ச்சேதம் ஏதுமின்றி தப்பித்தனர்.

ஆகஸ்ட் 24ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் Legion d'honneur என்ற உயர்ந்த விருதை, அந்த நால்வருக்கும், பிரான்ஸ் அரசுத் தலைவர், Francois Hollande அவர்கள் வழங்கினார். "அடிப்படைவாதம் என்ற தீமை நேருக்குநேர் இருக்கும்போது, அங்கு, மனிதம் என்ற நன்மையும் இருக்கத்தான் செய்கிறது. அந்த நன்மையின் அவதாரமே, நீங்கள் நால்வரும்" என்று, பிரெஞ்ச் அரசுத் தலைவர், Francois Hollande அவர்கள் இந்த நால்வருக்கும் விருது வழங்கிய வேளையில் கூறினார்.

நன்மையின் அவதாரங்களாக வாழ நாம் அனைவருமே அழைக்கப்பட்டுள்ளோம். அது மட்டுமல்ல. இவ்வுலகில் நாம் செய்யும் நன்மைகள், மறு உலகிலும் நம்மைத் தொடரும் என்ற உண்மையை, 'இறுதித் தீர்ப்பு உவமை' நமக்கு தெளிவாக்குகிறது. அறிமுகமான உறவுகளையோ, அறிமுகமே இல்லாத அயலவரையோ, சாவிலிருந்து காப்பது மட்டுமல்ல, அவர்கள் வாழ்வைப் பாதுகாப்பதற்கும் நாம் என்ன செய்துள்ளோம் என்ற கேள்வியை நம் மனதில் விதைக்கிறது, 'இறுதித் தீர்ப்பு உவமை'. குறிப்பாக, வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஒவ்வொருநாளும் போராடி வரும் ஏழை, எளியவரை வரிசைப்படுத்தி, அவர்களுக்கு நாம் என்ன செய்துள்ளோம் என்ற கேள்வியை இந்த உவமை உருவாக்குகிறது. அதுவும், நம் வாழ்வின் இறுதியில் இந்தக் கேள்வி நமக்கு முன் வைக்கப்படும் என்று இந்த உவமை கூறுகிறது.

மத்தேயு நற்செய்தி, 25ம் பிரிவில் இயேசு கூறிய இறுதி உவமையாக, இன்னும் சொல்லப்போனால், அவர் சொன்ன இறுதி வார்த்தைகளாக இந்த உவமை இடம்பெற்றுள்ளது. 16 இறைச் சொற்றொடர்களில் (மத். 25: 31-46) கூறப்பட்டுள்ள இந்த உவமையின் அறிமுக வரிகளுக்கு இப்போது செவிமடுப்போம்

மத்தேயு நற்செய்தி 25 31-33

வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

மானிட மகனின் அரியணைக்கு முன், கூட்டப்படும் மக்களினத்தார் அனைவரும், இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றனர். செம்மறியாடுகள், வெள்ளாடுகள், வலப்பக்கம், இடப்பக்கம் என்ற வார்த்தைகள், இந்தப் பிரிவை விளக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகளின் ஆழத்தையும், எதன் அடிப்படையில் இந்த பிரிவுகள் எழுந்தன என்பதையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.