2015-09-01 16:25:00

இந்தியப் பழங்குடியினரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்


செப்.01,2015. இயற்கையை மதித்து, அதன் கொடைகளைக் குறித்து மகிழ்ச்சியடையும் நிலையை, இந்தியப் பழங்குடியினரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்தார், இந்தியாவின் ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ.

இச்செவ்வாய்க்கிழமையன்று அகில உலக திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட, படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாள் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த கர்தினால் டோப்போ அவர்கள், இந்தியாவில் பூர்வீக இனத்தைச் சேர்ந்த 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கர், இயற்கையை மதித்து அதில் ஒன்றித்து வாழும் நிலையில், அனைத்து கத்தோலிக்கர்களும் உள்மனமாற்றம்பெற்று, இயற்கை குறித்த தங்களின் பொறுப்புணர்வுகளை உணரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இறைவன் படைத்த அழகிய இயற்கையை, மனிதன், தன் பேராசையால் அழித்துவரும் நிலைகளின் விளைவுகளாக, காலநிலை மாற்றத்தை நாம் நேரடியாக அனுபவிக்க முடிகிறது எனவும் கவலையை வெளியிட்டார் கர்தினால்.

கிறிஸ்துவுக்கு உண்மையான சாட்சிகளாக நாம் விளங்கவேண்டுமெனில், இன்றைய சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு, நீதியான தீர்வு காண்பவர்களாக செயல்படவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் ராஞ்சி பேராயர் கர்தினால் டோப்போ. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.