2015-08-31 15:37:00

வாரம் ஓர் அலசல் - படைப்பு பாதுகாக்கப்பட செபிப்போம்


ஆக.31,2015.  ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல், காடும் உடையது அரண்’ என்பது திருக்குறள். ஒரு நாட்டுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டியவைகளுள் காடும் முக்கியமானது என்கிறார் வள்ளுவர். 2004ம் ஆண்டில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சுனாமி தாக்கியபோது, அலையாற்றிக் காடுகளை(Mangrove Forests) அரணாகக் கொண்டிருந்த ஊர்களுக்குள் ஆழிப் பேரலைகள் நுழையவில்லை. எனவே காடுகள் நாடுகளின் பாதுகாப்புக்கு மட்டுமன்றி மழைவளத்துக்குக் காரணமாக அமைகின்றன. ஆனால் அடர்ந்து வளர்ந்த மழைக்காடுகள் அழிப்பு, செழித்து பரந்த புல்வெளிகள் ஒழிப்பு, பல்வேறு உயிரிகளுக்கும் உற்ற உறைவிடமாகத் திகழும் பவளப் பாறைகள் தகர்ப்பு, அரிய கடல்வாழ் உயிரினங்கள் அழிப்பு, காற்றுமண்டலம் மாசுகேடு, அதனால் உயிரினங்களின் வாழ்வு அச்சுறுத்தல் என பல நெருக்கடிகளை இன்று மனித சமுதாயம் சந்தித்து வருகிறது. இயற்கையைப் பாதுகாக்க வேண்டுமென்பது இன்று காலத்தின் கட்டாயமாகி உள்ளது. காடுகளில் விழும் மரங்களால் காடுகள் காரிருள் சூழ்ந்து காணப்படுவதாலேயே, இன்று வீடுகள் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்! திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பொதுவான பூமியைப் பாதுகாப்பதற்கு ஒரு திருமடல் வெளியிட்டிருப்பதோடு, படைப்பைப் பாதுகாப்பதற்காகச் செபிக்கும் உலக நாள் ஒன்றையும் அறிவித்திருக்கிறார். செப்டம்பர் 01, இச்செவ்வாயன்று இந்தச் செப நாள் கத்தோலிக்கத் திருஅவையில் முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. நாமும் இக்கருத்துக்காகச் செபித்து நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை அழிவிலிருந்து  பாதுகாப்பதற்கு முயற்சிப்போம்.

தமிழகத்தின் திருச்சியில், சந்திரகுமார், காமராஜ், சசிகுமார், சதீஸ்குமார் ஆகிய நான்கு எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்கள், குப்பவண்டி டாட் காம் என்ற இணையதளத்தை ஆரம்பித்து வீடுகளில் சேரும் பழைய பொருட்களை எடைக்கு வாங்கி விற்று வருகின்றனர். பழைய தினத்தாள்கள், பயன்பாடு இல்லாத பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை வீட்டில் ஏதாவது ஓர் இடத்தில் அடைத்து வைத்தோ அல்லது விருப்பமான இடங்களில் கொட்டியோ சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவது இவர்களின் முயற்சியால் குறையும் என்பது எம் நம்பிக்கை. அதோடு குப்பவண்டி டாட் காம் என்ற இவர்களின் புதிய முயற்சியால் இவர்கள் தங்கள் வாழ்வையும் நடத்தி வருகின்றனர். 'குப்பவண்டி டாட் காம்' அமைப்புக்கு வித்திட்ட எம்.சந்திரகுமார், இப்பணி குறித்து எம்மோடு பகிர்ந்து கொண்டதைத் தருகிறோம்

எங்களுக்கு லாபம் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும் எங்களால் முடிந்த வரை பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க சிறு முயற்சி செய்கிறோம் என்பது மனதுக்கு நிறைவாக உள்ளது. எந்த தொழிலையும் இன்றைய நவீன காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயமாக சாதிக்கலாம்'' என்றார் சந்திர குமார். அன்பர்களே, இயற்கையைப் பாதுகாக்கும் நம் முயற்சிகளையும் அதிகரிப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.