2015-08-31 16:08:00

செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 முடிய, படைப்பின் காலம்


ஆக.31,2015. படைப்பின் பாதுகாவலர்கள் என்று நமக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பை  புதுப்பிக்கும் வகையில், நாம் படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாளில் பங்கேற்போம் என்று திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பின் அடிப்படையில், செப்டம்பர் 1, இச்செவ்வாயன்று, படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாளை கத்தோலிக்கத் திருஅவை கடைபிடிக்கிறது.

1989ம் ஆண்டு முதல், கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சபையினர், செப்டம்பர் முதல் தேதியை, படைப்பின் பாதுகாப்பிற்கென அர்ப்பணித்து வருகின்றனர்.

மேலும், செப்டம்பர் முதல் தேதி துவங்கி, படைப்பின் பாதுகாவலர் என்று வணங்கப்படும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாளான அக்டோபர் 4ம் தேதி முடிய, படைப்பின் காலம் என்று கொண்டாட பல கிறிஸ்தவ சபைகளும், கத்தோலிக்க அமைப்புக்களும் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளன.

2003ம் ஆண்டு முதல், படைப்பின் காலத்தைக் கொண்டாட, பிலிப்பின்ஸ் ஆயர்கள், தலத்திருஅவையை ஊக்குவித்து வந்துள்ளனர்.

அதேபோல், 2004ம் ஆண்டுமுதல், லூத்தரன் சபையினரும், 2007ம் ஆண்டு முதல், WCC எனப்படும் உலகத் திருஅவைகளின் அவையினரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், அக்டோபர் 4ம் தேதி முடிய, படைப்பின் காலம் என்ற முயற்சியை, பல்வேறு வழிகளில் கொண்டாடி வருகின்றனர். 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.