2015-08-31 16:14:00

இயற்கையைப் பாதுகாக்க, பிரான்சிஸ்கன் துறவு சபையினரின் ஆராதனை


ஆக.31,2015. இந்தியாவில், பிரான்சிஸ்கன் துறவு சபையினரும் அவர்களோடு தொடர்புடையவர்களும் என 50,000த்திற்கும் மேற்பட்டோர்,  செப்டம்பர் 1, இச்செவ்வாயன்று, படைப்பின் பாதுகாப்பு என்ற கருத்தை மையப்படுத்திய ஒரு மணிநேர செப வழிபாட்டை அவரவர் இடங்களில் நடத்த உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினர் கடைபிடித்துவரும் படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாளை அவர்களுடன் இணைந்து சிறப்பிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, செப்டமபர் முதல் தேதி உலகம் முழுவதும் தலத்திரு அவைகள் பல்வேறுத் திட்டங்களை வகுத்துள்ளன.

இயற்கையை அன்புகூர்ந்து அதனை தன் சகோதர சகோதரியாகப் பார்த்த அசிசி நகர் புனித பிரான்சிஸை பின்பற்றும், பல்வேறு பிரான்சிஸ்கன் துறவுச் சபையினர், ஒருமணிநேர திருநற்கருணை ஆராதனைக்கு திட்டமிட்டுள்ளனர். 

இச்செய்தியை பத்திரிகையாளர்களுக்கு அறிவித்த AFFI என்ற இந்திய பிரான்சிஸ்கன் குடும்பங்கள் அமைப்பின் தலைவர் கப்புச்சின் அருள்பணி A.J. மேத்யூ அவர்கள், திருத்தந்தையின் அழைப்பை ஏற்று, அவருடன் ஒன்றித்து, படைப்பின் பாதுக்கப்பிற்கென இந்த திருநற்கருணை வழிபாடு நடத்தப்படும் என்றார்.

இதே கருத்தை வெளிப்படுத்திய AFFI அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், கப்புச்சின் அருள்பணி நித்ய சகாயம் அவர்கள், செபமும் திருநற்கருணை ஆராதனைகளும், இறைவனின் படைப்போடு நம் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றார். இயற்கையைப் பொறுத்த அளவில் நம் பொறுப்புணர்வை அடையாளமுறையில் அல்ல, மாறாக ஓர் உறுதியான அர்ப்பணமாக மாற்றவேண்டும் என்பதற்கு, பிரான்சிஸ்கன் துறவுசபையினர் தொடர்ந்து உழைத்துவருவதாக அருள்பணி நித்ய சகாயம் அவர்கள் மேலும் கூறினார். 

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.