2015-08-29 14:53:00

மனிலாவில் இயற்கையைப் பாதுகாப்பதற்கான உலக செப நாள்


ஆக.29,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செவ்வாய் மாலையில் வத்திக்கானில் இயற்கையைப் பாதுகாப்பதற்கான உலக செப நாள் திருவழிபாட்டை தலைமையேற்று நடத்தவுள்ளவேளை, அதே நாளில் மனிலாவில் இதே செப நாள் திருவழிபாட்டை கர்தினால் அந்தோணியோ தாக்லே அவர்கள் நடத்தவுள்ளார்.

பிலிப்பைன்ஸில் கடந்த ஜூலையில் தொடங்கப்பட்ட, படைப்பின் காலம் என்ற ஆறு வார நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த உலக செப நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இந்நாள்களில், பிலிப்பைன்ஸின் கத்தோலிக்கப் பள்ளிகள், பங்குகள் மற்றும் கழகங்களில், சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வுகளும், அருங்காட்சியகமும், கொண்டாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

மேலும், வருகிற நவம்பரில் பாரிசில் உலக நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்கவிருக்கும் உச்சி மாநாட்டில் சமர்ப்பிப்பதற்கென பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர்கள் தயாரித்துவரும் கோரிக்கை மனுவில் கையெழுத்துக்கள் வாங்கும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது. 

உலகளாவிய வெப்பநிலையை 1.5 செல்சியுஸ் டிகிரிக்குக் குறைவாகக் கொண்டு வருமாறும், காலநிலை மாற்றத்தின் பாதிப்பை எதிர்கொள்ளும் ஏழைகளுக்கு அதிக அளவில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்றும் இம்மனுவில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. 

பிலிப்பைன்ஸில் கடந்த ஜூலையில் தொடங்கப்பட்ட, ‘படைப்பின் காலம்’ என்ற ஆறு வார நிகழ்வு, உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கத்தின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில், உலகில் ‘காலநிலை நீதி’க்காக உழைக்கும்  நூற்றுக்கும் மேற்பட்ட கத்தோலிக்க நிறுவனங்கள் இணைந்துள்ளன.

செப்டம்பர் முதல் தேதி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருப்பீட அதிகாரிகள் அனைவருடன் இணைந்து இயற்கையை பாதுகாப்பதற்காகச் செபிக்கவுள்ளார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.