2015-08-29 15:10:00

போலியோ பாதிப்பில்லாத இந்தியா உருவானதில் திருஅவைக்கு பங்கு


ஆக.29,2015. இந்தியாவில் தலத்திருஅவையும், அரசும் இணைந்து செயலாற்றியதன் பயனாக, இலட்சக்கணக்கான மக்களின் துன்பங்களுக்குக் காரணமான போலியோ நோய் முழுவதும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

போலியோ நோய் பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது என்று உலக நலவாழ்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த, இந்திய கத்தோலிக்க போலியோ நோய்க் கட்டுப்பாட்டு மையப் பேச்சாளர் அருள்பணி Ferdinand Nostrum அவர்கள், இந்த வெற்றிக்கு தலத்திருஅவையும், அரசும் இணைந்து செயலாற்றியதே காரணம் என்று தெரிவித்தார்.

போலியோ நோய்க்கெதிரான நடவடிக்கையில் வெற்றி அடைந்திருப்பது எளிதான செயல் அல்ல என்றும், முதன்முறையாக, 1997ம் ஆண்டில் தலத்திருஅவையும், அரசும் இணைந்து போலியோ நோய்த் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது என்றும் கூறினார் அருள்பணி Ferdinand.

கடந்த 18 ஆண்டுகளாக அரசின் திட்டங்களைக் கொண்டு, கத்தோலிக்க மருத்துவர்களும், தன்னார்வத் தொண்டர்களும், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களும் இணைந்து இம்முயற்சியில் ஓய்வின்றி உழைத்தனர் என்றும் கூறினார் அருள்பணி Ferdinand.

இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் யாரும் புதிதாக போலியோவால் தாக்கப்படவில்லை என்ற மகிழ்ச்சிச் செய்தி இந்த ஆகஸ்ட் 9ம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.