2015-08-29 14:42:00

பார்வையாளர் நாட்டுக் கொடிகள் ஐ.நா.வில் - திருப்பீடம் கருத்து


ஆக.29,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் பார்வையாளர் நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்படுவது குறித்து அந்நிறுவனம் எடுக்கும் தீர்மானத்தை திருப்பீடம் ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. தலைமையகத்தில் பாலஸ்தீனக் கொடி பறக்கவிடப்படுவது குறித்து எழுந்துள்ள விவகாரத்தையொட்டி, இவ்வெள்ளி மாலையில் அறிக்கை வெளியிட்ட திருப்பீடம், 1945ம் ஆண்டில் ஐ.நா. நிறுவனம் உருவாக்கப்பட்டது முதல், அதன் தலைமையகத்தில், அதன் உறுப்பு நாடுகளின் கொடிகள் மட்டுமே பறக்கவிடப்பட்டுள்ளன, எனினும், வருங்காலத்தில், இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா. எடுக்கும் எந்தத் தீர்மானத்தையும் திருப்பீடம் ஏற்கும் என்று கூறியுள்ளது.  

ஐ.நா. தலைமையகத்திலும், அதன் அலுவலகங்களிலும் பார்வையாளர் நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்படுவது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு திருப்பீடம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

ஐ.நா. தலைமையகத்தில் அதன் பார்வையாளர் நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்படுவது குறித்து இவ்வியாழனன்று பாலஸ்தீனம் முன்வைத்துள்ள பரிந்துரையில், திருப்பீடத்தின் கொடியும் பறக்கவிடப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொது அவையில் வருகிற செப்டம்பர் 25ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றவிருப்பதையொட்டி இக்கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.