2015-08-29 15:19:00

குடியேற்றதாரர் மரணங்கள் ஒரு பேரழிவு, ஐரோப்பிய காரித்தாஸ்


ஆக.29,2015. குடியேற்றதாரர்கள், EU ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை, மாறாக, அந்நாடுகளின் கொள்கைகளே இம்மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்று ஐரோப்பிய காரித்தாஸ் நிறுவனம் கூறியது.

குடியேற்றதாரரை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் லிபியக் கடற்கரைக்கு அருகே கவிழ்ந்ததில் ஏறக்குறைய 200 பேர் இறந்துள்ளனர். மேலும், ஆஸ்ட்ரியாவில் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டிருந்த ஒரு லாரியிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட குடியேற்றதாரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வியாழனன்று இடம்பெற்ற இவ்விரு நிகழ்வுகளுக்குப் பின்னர் அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய காரித்தாஸ், குடியேற்றதாரர்களின் மரணங்கள் ஒரு பேரழிவு என்று கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அவையின் குடியேற்றதாரர் கொள்கையின் ஒரு பகுதியாக, தற்போது இடம்பெற்றுவரும் மறுவாழ்வு மற்றும் குடியேற்றதாரரை மீட்கும் பணிகளைப் வரவேற்றுள்ள ஐரோப்பிய காரித்தாஸ் அதிகாரி மரிய தெம்பஸ்தா அவர்கள், இருபதாயிரம் பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் போதுமானதாக இல்லை என்று வத்திக்கான் வானொலியில் கூறினார்.

மேலும், மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் குடியேற்றதாரரின் எண்ணிக்கை இவ்வாண்டில் மூன்று இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று ஐ.நா. கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.