2015-08-27 16:11:00

'வீடற்ற இயேசு' உருவத்தை திருத்தந்தை பார்க்கும் வாய்ப்பு


ஆக.27,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாஷிங்டன் நகருக்கு வருகை தரும் வேளையில், அங்கு வைக்கப்பட்டுள்ள 'வீடற்ற இயேசு' உருவத்தை அர்ச்சித்தால், அது, அந்நகரில் வாழும் அனைத்து வீடற்றோரையும் அர்ச்சிப்பதற்கு அடையாளமாக அமையும் என்று, அண்மையக் காலம் வரை, அந்நகரில் வீடற்றவராக வாழ்ந்த Roland Woody என்பவர் CNS கத்தோலிக்கச் செய்தியிடம் கூறினார்.

கனடா நாட்டைச் சேர்ந்த Timothy Schmalz என்ற சிற்பி வடிவமைத்த 'வீடற்ற இயேசு' வெண்கல உருவத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2013ம் ஆண்டு, நவம்பர் மாதம் புனித பேதுரு வளாகத்தில் அர்ச்சித்தார்.

இந்த உருவத்தை அர்ச்சித்தபோது, அது அழகியதொரு கலைவடிவம் என்றும், இயேசுவுக்கு சிறந்ததொரு அடையாளம் என்றும் Schmalz அவர்களிடம், திருத்தந்தை கூறினார் என்று, CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

Schmalz அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள 'வீடற்ற இயேசு' உருவம், உரோம் நகரில் மட்டுமல்லாமல், வாஷிங்டன், டென்வர், சிகாகோ, டொரான்டோ ஆகிய நகரங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த உருவத்தில் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டவர்கள், வீடற்று வாழ்வோர் மீது கூடுதலாக அக்கறை கொள்வதைக் காண முடிகிறது என்று, வாஷிங்டன் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகப்  பணியாற்றும் அருள்பணி John Enzler அவர்கள் CNS செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.