2015-08-27 15:29:00

இந்திய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் அதிகமில்லை


ஆக.27,2015. கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்கின்றனர் என்ற பொய்யான செய்தியை வெளியிட்டு வருபவர்களுக்கு, இந்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள மக்கள் தொகை புள்ளிவிவரங்கள், தகுந்த பதிலை அளித்துள்ளன என்று இந்தியாவின் போபால் பேராயர், லியோ கொர்னெலியோ அவர்கள் கூறியுள்ளார்.

2001ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு முடிய உள்ள பத்தாண்டு காலத்திற்குரிய மக்கள் தொகையின் மத வாரியான புள்ளிவிவரங்கள், ஆகஸ்ட் 25, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டன.

இப்புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் அதிகமில்லை என்று கூறப்பட்டதையடுத்து, பேராயர் கொர்னெலியொ அவர்கள் தன் கருத்துக்களை வெளியிட்டபோது, இந்தியாவில் கிறிஸ்தவர்கள் பெருமளவில் மதமாற்றம் செய்துவருகின்றனர் என்ற பிரச்சாரம் பொய்யானது என்று கூறினார்.

அரசியல் ஆதாயம் தேடும் இந்து அடிப்படைவாதக் குழுக்கள், இந்தியாவில் வாழும் அனைத்து இஸ்லாமியரையும், தீவிரவாதிகளாகவும், கிறிஸ்தவர்களை மதமாற்றம் செய்பவர்களாகவும் காட்டி வருகின்றன என்று கிறிஸ்தவ போதுநிலைத் தலைவர், ஜான் தயாள் அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

UCAN வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் வாழும் 121 கோடி மக்களில், ஏறத்தாழ 80 விழுக்காட்டினர், அதாவது, 96 கோடி பேர் இந்துக்கள், 17 கோடி பேர் இஸ்லாமியர், 2 கோடியே 78 இலட்சம் பேர் கிறிஸ்தவர்கள், 2 கோடி பேர் சீக்கியர்கள், 84 இலட்சம் பேர் புத்தர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.