2015-08-26 16:05:00

மிலான் எக்ஸ்போவில் தர்மப் பணிகளுக்கு, 68,000 யூரோக்கள் நிதி


ஆக.26,2015. Expo 2015 என்ற பெயரில், இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றுவரும் அகில உலகக் கண்காட்சியில், திருப்பீடத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அரங்கத்தை, இதுவரை 6,90,000த்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர் என்று திருப்பீடம் கூறியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் மட்டும், இதுவரை 2,00,000 த்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள இந்த அரங்கத்தில், திருத்தந்தையின் தர்மப் பணிகளுக்கு, 68,000 யூரோக்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது.

"அப்பம்" என்ற கருத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கத்தில், முதல் மூன்று மாதங்கள், இயேசுவின் இறுதி இரவுணவு என்ற கருத்துடன் கூடிய ஓவியங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

உணவை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கத்தில், நீதி, அமைதி, விசுவாசம் ஆகிய மூன்று உண்மைகளுக்கும் இடையே உள்ள தொடர்புகள் விளக்கப்பட்டுள்ளன என்றும், பொருளாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்த கல்வி வழங்கப்படுகின்றது என்றும் அரங்கப் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இவ்வரங்கத்தில் திரட்டப்படும் நிதி, திருத்தந்தையின் தர்மச் செயல்களைக் கண்காணிக்கும் Cor Unum அமைப்பின் வழியே, மத்தியக் கிழக்குப் பகுதியில் நிலவும் மோதல்களால் துன்புறும் குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், திருத்தந்தை வெளியிட்டுள்ள "இறைவா உமக்கே புகழ்" என்ற திருமடலின் பிரதிகள், 5000த்திற்கும் அதிகமான எண்ணிக்கையில், இந்த அரங்கத்தின் வழியே, விற்பனையாகியுள்ளன என்றும் அரங்கத்தின் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.