2015-08-26 16:05:00

கந்தமாலில் துன்புற்ற கிறிஸ்தவர்கள், ஓர் எடுத்துக்காட்டு


ஆக.26,2015. உலகெங்கிலும் துன்பங்களை அனுபவித்துவரும் கிறிஸ்தவர்களுக்கு, கந்தமாலில் துன்புற்ற கிறிஸ்தவர்கள், ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் என்று, கட்டக்-புபனேஸ்வர் பேராயர், ஜான் பார்வா அவர்கள் கூறினார்.

2008ம் ஆண்டு, ஆகஸ்ட் 25ம் தேதி, இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த கந்தமால் பகுதியில் 55,000த்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள், இந்து அடிப்படைவாதக் குழுவினரால், மிக அதிக அளவு துன்பங்களை அடைந்தனர்.

இந்தக் வன்முறை நிகழ்வின் ஏழாம் ஆண்டு நினைவையொட்டி, பேராயர் பார்வா அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில், ‘இவ்வுலகம் தரமுடியாத அமைதியை, கிறிஸ்து மட்டுமே தருவார்’ என்ற கூற்றின் முழுப் பொருளையும் இம்மக்களின் வாழ்வில் உணரமுடிகிறது என்று கூறினார்.

இந்து அடிப்படைவாதக் குழுவினரால் நடத்தப்பட்ட கொலை, பாலியல் வன்கொடுமை, உடல் உறுப்புக்களின் இழப்பு என்ற தனிப்பட்டக் கொடுமைகளுடன், 5,600க்கும் அதிகமான வீடுகளும், 300க்கும் அதிகமான கோவில்களும், கத்தோலிக்க நிறுவனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.

இத்தனை கொடுமைகளின் இறுதியிலும், வன்முறையாளர்கள் செய்ய இயலாத ஒரே காரியம், இம்மக்களை கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முடியாதது ஒன்றே என்று பேராயர் பார்வா அவர்கள் கூறினார்.

கந்தமால் வன்முறையின் ஏழாம் ஆண்டு நினைவையொட்டி, "இனி வன்முறை வேண்டாம்" என்ற கருத்தில், இந்தியாவின் பல பகுதிகளில் கத்தோலிக்கக் குழுக்கள், அமைதி முயற்சிகளை மேற்கொண்டன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.