2015-08-26 15:55:00

எபிரேயம் பேசும் கத்தோலிக்கர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து


ஆக.26,2015. புனித யாக்கோபு மறைப்பணிக் குழுவைச் சார்ந்தவர்கள்,  தங்கள் வார்த்தைகளால் மட்டுமல்ல, தங்கள் வாழ்வாலும் நற்செய்தியின் சாட்சிகளாக வாழ்வார்களாக என்ற வாழ்த்துச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

புனித பூமியில் வாழும் கத்தோலிக்கர்கள், எபிரேய மொழியில் தங்கள் வழிபாட்டைத் தொடர்வதற்கு, புனித யாக்கோபு மறைப்பணிக் குழு, 1955ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இப்பணிக்குழுவின் 60ம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

எபிரேய மொழிபேசும் கத்தோலிக்கர்களின் முதுபெரும் தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றும் இயேசு சபை அருள்பணி David Neuhaus அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில், இயேசு பயன்படுத்திய எபிரேய மொழியுடன் கத்தோலிக்கர்களை இணைக்கும் இப்பணிக் குழுவின் முயற்சிகளுக்கு, தன் ஆசீரை வழங்குவதாக, திருத்தந்தை கூறியுள்ளார்.

2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்கு முன்பு, கத்தோலிக்கத் திருஅவையில், வழிபாட்டு மொழியாக இலத்தீன் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த காலத்திலேயே, புனித யாக்கோபு மறைப்பணிக் குழுவின் முயற்சியால், அக்குழுவினர், எபிரேய மொழியைப் பயன்படுத்த, திருத்தந்தையின் அனுமதி பெற்றனர் என்று, அருள்பணி David Neuhaus அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.