2015-08-26 16:03:00

அமைதி ஆர்வலர்கள் : 1994ல் நொபெல் அமைதி விருது - பாகம் 1


ஆக.26,2015. ஆல்பிரட் நொபெல் அவர்களின் உயிலின்படி, நாடுகளுக்குள் உடன்பிறப்பு உணர்வை உருவாக்க, ஆயுதக் களைவு அல்லது ஆயுதக் குறைப்புக்காக, படைபலத்தின் குறைப்புக்காக, அமைதி மாநாடுகளை நடத்தி ஊக்குவிக்க, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, 12 இலட்சம் டாலர் மதிப்புடைய நொபெல் அமைதி விருது 1800களிலிருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. ஆயினும் இவ்விருதுகள் அறிவிக்கப்படும்போது அதைப் பெறும் நபர்களை எப்போதும் எல்லாரும் ஏற்றுக்கொள்வதில்லை. அரசுத்தலைவர் பதவியேற்ற 12 நாள்களுக்குள் 2009ல் இவ்விருதைப் பெற்ற அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமா, 1992ல் இவ்விருதைப் பெற்ற மாயா இன Rigoberta Menchú, 2012ல் இவ்விருதைப் பெற்ற ஐரோப்பிய ஒன்றியம், 1994ம் ஆண்டில் இவ்விருதை மற்ற இரு தலைவர்களோடு பகிர்ந்து கொண்ட பாலஸ்தீனத் தலைவர் Yasser Arafat... இப்படி இதுவரை இவ்விருதைப் பெற்றவர்களில் குறைந்தது பத்துப் பேர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஆயினும், 1994ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை Yasser Arafat, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் Shimon Peres, இஸ்ரேல் பிரதமர் Yitzhak Rabin ஆகிய மூன்று தலைவர்களுக்கும் அறிவித்த நொபெல் விருதுக் குழு, மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்க இம்மூவரும் எடுத்த முயற்சிகளுக்காக இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்தது.

Yasser Arafat அவர்கள், பாலஸ்தீன விடுதலை நிறுவனத்தின் தலைவராக 1969ம் ஆண்டு முதல், 2004ம் ஆண்டில் இறக்கும்வரை பணியாற்றியவர். 1929ம் ஆண்டில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பிறந்த அரபாத் அவர்கள், 1933ல் அவரது தாய் இறந்த பின்னர் தாயின் சகோதரரோடு எருசலேமில் வாழ்வதற்கு அனுப்பப்பட்டார். நான்கு ஆண்டுகள் எருசலேமில் வாழ்ந்த பின்னர், மீண்டும் கெய்ரோ சென்று தந்தையோடு வாழ்ந்தார். ஆனால் அரபாத்திற்கு அவரது தந்தையோடு நல்லுறவு கிடையாது. ஏனெனில் 1952ம் ஆண்டில் அவரது தந்தை இறந்தபோது அவரது இறுதி அடக்கச் சடங்கில் கலந்து கொள்வதற்கு இவர் செல்லவில்லை. யூதர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் எதிராகச் சண்டையிடுவதற்காக, அரபாத் இளவயதிலே கெய்ரோவிலிருந்து பாலஸ்தீனாவுக்கு ஆயுதங்களைக் கடத்தினார். அக்காலத்தில் முதலாம் Faud பல்கலைக்கழகமாக இருந்த தற்போதைய கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த போது அரபு-இஸ்ரேல் போரில் போரிடுவதற்காக, 1948ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தை விட்டு விலகினார் அரபாத். ஆயினும் இப்போரில் இஸ்ரேல் வென்றது. இஸ்ரேல் நாடும் உருவானது.

1956ம் ஆண்டின் சூயஸ் கால்வாய் விவகாரத்தைத் தொடர்ந்து, அப்போதைய எகிப்து அரசுத்தலைவர் கமல் அப்தெல் நாசர் அவர்கள், சீனாய் தீபகற்பத்திலும், காசா கரையிலும் ஐ.நா.அவசரகாலப் படை உருவாக இசைவு தெரிவித்தார். இதனால் அனைத்து கெரில்லாப் படைகளும் எகிப்தைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. இதனால், 1958ம் ஆண்டில் அரபாத்தும் இன்னும் சிலரும், கெய்ரோவில் ஆரம்பித்த Al-Fatah என்ற இயக்கமும் வெளியேற வேண்டியிருந்தது. Al-Fatah என்ற இயக்கம், இஸ்ரேலுக்கு எதிராக மறைவாக இருந்து ஆயுதம் ஏந்திப் போராடும் இயக்கமாகும். அரபாத் கானடாவுக்கும், பின்னர் சவுதி அரேபியாவுக்கும் விசாவுக்கு விண்ணப்பித்தார். அது கிடைக்காததால் 1957ம் ஆண்டில் குவைத்திற்கு விசா கிடைத்து அங்குச் சென்றார். 1960களின் மத்தியில் இந்த Al-Fatah இயக்கம் போதுமான அளவு வளர்ந்திருந்ததால், அது முழுவதும் புரட்சிப் படையாக மாறியது. அரபாத்தின் இந்த இயக்கம், குவைத்திலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தது. 1964ம் ஆண்டில் PLO என்ற பாலஸ்தீன விடுதலை நிறுவனத்தை ஆரம்பித்தார் அரபாத். பாலஸ்தீனம் விடுதலை பெறுவதற்கு உழைப்பதற்கு பல்வேறு குழுக்களை இந்நிறுவனம் ஒன்று சேர்த்தது. அதற்கு மூன்று ஆண்டுகள் சென்று, இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே ஆறு நாள் போர் தொடங்கியது. இதிலும் இஸ்ரேல் வெற்றி பெற்றது. அதன்பின்னர் அரபாத்தின் Fatah இயக்கம் PLO நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1969ம் ஆண்டில் அரபாத், PLO நிறுவனத்தின் தலைவரானார்.

அரபாத், ஜோர்டன் நாட்டில் இருந்து கொண்டு PLO நிறுவனத்தை வளர்த்தார். ஆனால் ஜோர்டன் அரசர் ஹூசைன் அவர்களால் வெளியேற்றப்பட்டதால், லெபனான் நாட்டுக்கு PLO நிறுவனத்தை எடுத்துச் சென்று, அங்கிருந்து இஸ்ரேலுக்கு எதிராக குண்டு வீச்சு தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடு மற்றும் கொலைகளை நடத்தினார். மியுனிச் ஒலிம்பிக் விளையாட்டுகளின்போது 1972ம் ஆண்டு நடந்த கொலைகள் குறிப்பிடத்தக்கவை. 1980களின் தொடக்கத்தில் லெபனானிலிருந்தும் PLO வெளியேற்றப்பட்டது. அதன்பின்னர் West Bank மற்றும் Gaza Stripல் இஸ்ரேலின் ஆக்ரமிப்புக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினார் அரபாத். இஸ்ரேலின் பதில் தாக்குதலால் தெருக்களில் வன்முறைகள் தொடர்ந்தன.

1988ம் ஆண்டில் அரபாத், ஐ.நா. நிறுவனத்தில் பிரச்சனையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்புகளும் அமைதியில் வாழ முடியும் என உரையாற்றினார். அதன் பயனாக, 1993ம் ஆண்டில் ஆஸ்லோவில் அமைதிப் பேச்சுவார்த்தை இடம் பெற்றது. இதன்படி பாலஸ்தீனியர்க்கு தன்னாட்சியும், பாலஸ்தீனப் பகுதியில் தேர்தல் நடத்தவும் அனுமதிக்கப்பட்டது. இத்தேர்தலில் அரபாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990ல் அரபாத், தனது 61வது வயதில் 27 வயது பாலஸ்தீனிய கிறிஸ்தவப் பெண்ணை மணந்தார். 1994ம் ஆண்டில், Yasser Arafat, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் Shimon Peres, இஸ்ரேல் பிரதமர் Yitzhak Rabin ஆகிய மூவருக்கும் நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டது.  

பாலஸ்தீனாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒப்பந்தங்கள் தொடர்ந்து இடம்பெற்றிருந்தாலும், அவ்விரு பகுதிகளுக்கும் இடையே அமைதி இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. 2004ம் ஆண்டு அக்டோபரில் நோய்வாய்ப்பட்ட அரபாத், பாரிசில் கிசிச்சை பெற்றார். சிகிச்சை பலனளிக்காமல், அதே ஆண்டு நவம்பர் 11ம் தேதி காலமானார் அரபாத்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.