2015-08-25 15:01:00

விவிலியத் தேடல் : இறுதித் தீர்ப்பு உவமை – பகுதி - 2


உலக முடிவைப் பற்றி, நாம், அவ்வப்போது பேசி வந்துள்ளோம். குறிப்பாக, நிலநடுக்கம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், பெரிய அளவில் நம்மைத் தாக்கும்போதும், நாம் வகுத்துக்கொண்ட கால அளவில், முக்கியமான எண்கள் கொண்ட ஆண்டுகள் நெருங்கும்போதும், உலக முடிவு என்ற எண்ணம், நம் மனங்களில் அலை மோதியுள்ளது.

இவ்வகையில், 2000-2001ம் ஆண்டுகள் நெருங்கியபோது, உலகம் அழியப் போகிறதென்ற வதந்தி, சுற்றிச் சுற்றி வந்தது. குறிப்பாக, 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, நியூயார்க் நகரில், நடந்த ஒரு நிகழ்வு, நம் எண்ணங்களை, உலக முடிவு, மரணம் இவற்றை நோக்கித் திருப்பியது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் செல்வச் செழிப்பை பறைசாற்றும் அடையாளமாக உயர்ந்து நின்ற இரு வர்த்தகக் கோபுரங்கள், அன்று, விமானங்களால் தாக்கப்பட்டு, முற்றிலும் இடிந்து விழுந்தன. ஏறக்குறைய 3000 பேர் கொல்லப்பட்டனர். இந்த அழிவு, பட்டப் பகலில் நடந்ததால், பல வீடியோ காமிராக்களில் பதிவு செய்யப்பட்டு, உலகெங்கும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி, மிக ஆழமான தாக்கங்களை மக்கள் மனதில் உண்டாக்கிச் சென்றது. மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத முடிவான மரணத்தைப் பற்றி பல சிந்தனைகளை உருவாக்கிச் சென்றது. இவ்விதம் எழுந்த பல சிந்தனைகள், நூல் வடிவில் வெளிவந்தன. இந்நூல்களில் ஒன்று, Studs Terkel அவர்கள் எழுதிய இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? என்ற ஒரு நூல். 400 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்நூலில், 63 பேரின் எண்ணங்கள் பதியப்பட்டுள்ளன. மரணம், மறுவாழ்வு, மறுஜென்மம், விசுவாசம் என்ற பல எண்ணங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நூலின் ஆரம்ப வரிகள் இதோ:

"எனக்கு அறுபது வயதாகிறது. அண்மையில்தான் நான் என் உயிலை எழுதி, பதிவு செய்தேன். நிம்மதியாக இருக்கிறது. நான் தீயணைப்புத் துறையில் பணி செய்ததனால், வாழ்வு, சாவு என்ற எண்ணங்கள், அடிக்கடி எனக்கு எழுந்ததுண்டு. இத்துறையில் பணி செய்த காலத்தில், வாழ்வின் மீது அதிகப் பிடிப்புடன் வாழ்ந்திருக்கிறேன். நெருப்புக்குள் நுழைந்து, அங்கு, மரண பயத்துடன் காத்திருந்த மக்களைக் கண்டபோது, அவர்களைக் காப்பாற்றியபோது, நான் அதிகம் வாழ்ந்ததாய் உணர்ந்திருக்கிறேன்."

தீயணைப்புத் துறையில் பணி புரிந்த Tom Gates என்பவர் சொன்ன இந்தக் கூற்றுடன் ஆரம்பமாகிறது, இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? என்ற இந்நூல். மருத்துவர்கள், மதகுருக்கள், மரண தண்டனை பெற்று விடுதலை பெற்ற ஒருவர், Hiroshima அணுகுண்டு அழிவிலிருந்து தப்பித்த ஒருவர், துப்புரவுத் தொழிலாளி என்று... வாழ்வின் பல நிலைகளில் உள்ள 63 பேர், மரணத்தை, மறு வாழ்வைப்பற்றி சொல்லியுள்ள எண்ணங்கள், இப்புத்தகத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

இந்நூலில் Leonard Dubi என்ற கத்தோலிக்க அருள்பணியாளரின் கூற்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணம் குறித்து அவர் பேசுகையில், “மரணம் என்ற எண்ணம் எனக்குப் பயமளிக்கவில்லை. ஆனால் மரணிப்பது என்பது, சாவது என்பது, பயத்தை உண்டாக்குகிறது. மற்றவர்கள் இறப்பதைப் பார்த்திருக்கிறேன். அத்தனை பேர் சூழ்ந்து நின்றாலும், அந்த இறுதிப் போராட்டம், ஒவ்வொருவரும் தனியே மேற்கொள்ளும் போராட்டம் என்பதை எண்ணும்போது, பயம் ஏற்படுகிறது” என்று கூறுகிறார். மரணத்தை ஒவ்வொருவரும் தனியே சந்திக்க வேண்டும், தவறாமல் சந்திக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை.

மரணத்தை, ஒவ்வொருவரும் கட்டாயம் சந்திக்கவேண்டும் என்ற எண்ணம், மூவகை உணர்வுகளை உருவாக்கலாம். ஒரு நாள் சாகத்தான் போகிறோம். அதனால், உண்போம், குடிப்போம், எப்படியும் வாழ்வோம் என்று, சுயநலத்தைத் தூண்டிவிடும் உணர்வு, முதல் வகை. விளம்பர, வியாபார உலகங்கள், இந்த உணர்வுகளைத் தூண்டிவிட்டு, இலாபம் சம்பாதிக்கின்றன. கனடா நாட்டில் இயங்கிவரும் Ashley Madison என்ற ஒரு விளம்பர நிறுவனம், அண்மையில் வெளியிட்ட ஒரு விளம்பரத்தில், "Life is short. Have an affair" அதாவது, "வாழ்க்கை குறுகியது. திருமணத்திற்கு வெளியே ஓர் உறவை வைத்துக்கொள்ளவும்" என்ற வரிகள் காணப்பட்டன. திருமண வாழ்வை, குடும்ப வாழ்வை சீரழிக்கும் வண்ணம் தரப்படும் இத்தகைய விளம்பரங்கள், எப்படியும் வாழலாம் என்ற ஆசைத்தீயை வளர்க்கின்றன.

என்னதான் நல்லவற்றைச் செய்தாலும், எல்லாமே ஒரு நாள் அழியத்தான் போகிறது, நம்மையும் சேர்த்து... பின் ஏன் நல்லவற்றைச் செய்ய வேண்டும் என்ற விரக்தி உணர்வு இரண்டாவது வகை. சிறுவன் ஒருவன் தன் வீட்டுப்பாடங்களைச் செய்ய மறுக்கிறான். அப்பா ஏன் என்று காரணம் கேட்கிறார். “ஓ, இன்னும் அறுபது கோடி ஆண்டுகளில், உலகம் அழியத்தான் போகிறது... பின் எதற்கு நான் வீட்டுப்பாடங்கள் செய்யவேண்டும்?” என்று பதில் கேள்வி கேட்கிறான் சிறுவன். எல்லாமே அழியும் என்பதால், நல்லவை செய்வதை மறுத்து, முடங்கிப் போவது, இரண்டாம் வகை உணர்வு.

இதற்கு நேர் மாறாக, ‘எல்லாமே அழியத்தான் போகிறது, நானும் சாகப்போகிறேன்... அதற்கு முன் உள்ள நேரத்தில், என்னால் முடிந்தவரை நல்லது செய்வேன்’ என்பது, நம்பிக்கையை வளர்க்கும் மூன்றாம் வகை உணர்வு.

இந்த நம்பிக்கை உணர்வுக்கு, கூடுதல் அர்த்தம் தருவது, மறுவாழ்வு என்ற எண்ணம். நம் வாழ்வு, இவ்வுலகத்தோடு முடிவடைவதில்லை;  அது, மறு உலகில் தொடரும். அங்கு, இவ்வுலகில் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குத் தகுந்த வெகுமதியோ, தண்டனையோ பெறுவோம் என்பதை, பல்வேறு மதங்கள், பல வழிகளில் கூறியுள்ளன. இந்தக் கருத்தை வலியுறுத்தும் பல கதைகளும் உண்டு. அவற்றில் ஒன்று, இதோ:

செல்வந்தர் ஒருவர் மரணமடைந்தார். அவரை வான்வீட்டின் வாசலில் வரவேற்ற புனித பேதுரு, அவரை விண்ணகத்திற்குள் கூட்டிச்சென்றார். போகும் வழியில், பல அழகிய, உயரமான மாளிகைகளைக் கண்ட செல்வந்தர், தனக்குக் கிடைக்கப்போகும் மாளிகையைப் பற்றிய கற்பனையில், உற்சாகத்துடன் நடந்து கொண்டிருந்தார்.

புனித பேதுருவுடன் பல தெருக்களை வலம் வந்த செல்வந்தர், இறுதியாக சிறியதொரு ஓலைக் குடிசைக்கு முன் நிறுத்தப்பட்டார். அந்தக் குடிசையை செல்வந்தரிடம் காட்டி, "நீங்கள் வாழப் போகும் வீடு இதுதான்" என்று புனித பேதுரு சொன்னதும், செல்வந்தர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

தான் உலகில் வாழ்ந்த வீடு, இதைவிட பல்லாயிரம் மடங்கு விலையேறப் பெற்றது என்று செல்வந்தர் புனித பேதுருவிடம் முறையிட்டார். புனித பேதுரு அவரிடம், "உலகிலிருந்து மனிதர்கள் அனுப்பிவைப்பதைக் கொண்டு மட்டுமே இங்கு எங்களால் வீடுகளைக் கட்டமுடியும். நீங்கள் உலகிலிருந்தபோது எங்களுக்கு என்ன அனுப்பி வைத்தீர்களோ, அவற்றைக் கொண்டு, எங்களால் உருவாக்க முடிந்தது, இந்த இல்லம் மட்டுமே" என்று பதிலளித்தார்.

இவ்வுலக வாழ்வே நிரந்தரமானது, மரணத்தைத் தாண்டி ஒன்றுமில்லை என்ற கற்பனையில், இவ்வுலகில் அரண்மனை, அரியணை என்று சுயநலச் சிறைகளை உருவாக்கி, சுகம் காண்போருக்கு ஓர் எச்சரிக்கையாக இயேசு வழங்கிய உவமையே, இறுதித் தீர்ப்பு உவமை. இந்த உவமைக்குள் காலடி பதிப்பதற்கு முன், இந்த உவமையை இயேசு கூறியச் சூழலைச் சிந்திக்க முயல்வோம்.

28 பிரிவுகளைக் கொண்ட மத்தேயு நற்செய்தியில், முதல் இரு பிரிவுகள், இயேசுவின் பிறப்பையும்,  குழந்தைப் பருவத்தையும் விவரிக்கின்றன. இறுதி மூன்று பிரிவுகள் (26, 27, 28), இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளன. இடைப்பட்ட 23 பிரிவுகளில், இயேசு வழங்கும் ஐந்து நீண்ட உரைகளை, நற்செய்தியாளர் மத்தேயு, ஆங்காங்கே தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த ஐந்து உரைகளில், புகழ்பெற்ற 'மலைப்பொழிவு' என்ற உரையை, இயேசு, தன் பணிவாழ்வின் துவக்கத்தில் (பிரிவுகள் 5, 6, 7) வழங்கியதாக மத்தேயு .கூறியுள்ளார். அதேவண்ணம், அவரது பணிவாழ்வின் இறுதியில், இயேசு வழங்கிய ஐந்தாவது நீண்ட உரை, 'நிறைவுகாலப் பொழிவு' என்ற  தலைப்பில், 24, 25 ஆகிய இரு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் எழுப்பிய 'ஓசான்னா' முழக்கத்தோடு எருசலேம் நகரில் இயேசு நுழைதல், கோவிலைத் தூய்மையாக்குதல், ஆகிய பரபரப்பான நிகழ்வுகளை அடுத்து, தன் சீடர்களோடு தனித்திருக்கையில்,  இயேசு நிறைவுகாலப் பொழிவை வழங்கியதாக, நற்செய்தியாளர் மத்தேயு கூறியுள்ளார். இந்த நீண்ட உரையின் துவக்க வரிகளாக மத்தேயு கூறுவது இதுதான்:

மத்தேயு நற்செய்தி 24: 1-2

இயேசு கோவிலைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தபோது அவருடைய சீடர்கள் கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட அவரை அணுகி வந்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா! இங்கே, கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”என்றார்.

இஸ்ரயேல் மக்கள் வாழ்வின் அடித்தளம் என்று கருதப்பட்ட எருசலேம் கோவில் முற்றிலும் அழிக்கப்படும் என்ற அதிர்ச்சி தரும் முன்னறிவிப்போடு, இயேசு தன் 'நிறைவுகாலப் பொழிவை'த் துவக்குகிறார்.

இதைத் தொடர்ந்து, உலக முடிவு மிக நெருங்கியுள்ளது என்பதையும், அந்த முடிவுக் காலம், நெருக்கடி மிகுந்த காலமாக இருக்கும் என்பதையும் ஓர் எச்சரிக்கையாக, இயேசு, தன் சீடர்களுக்கு வழங்குகிறார். இந்த நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக்கொள்ள, மக்கள் விழிப்பாயிருக்க வேண்டும், தகுந்த தயாரிப்புடன், கண்விழித்துக் காத்திருக்க வேண்டும் என்ற அறிவுரைகளை, 'நம்பிக்கைக்குரிய பணியாளர் உவமை' (மத். 24: 45-51) வழியாகவும், 'மணமகளின் தோழியர் உவமை' (மத். 25: 1-13) வழியாகவும் இயேசு கூறினார். காத்திருப்பது மட்டும் போதாது; கணக்குக் கொடுக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்பதை 'தாலந்து உவமை' வழியே (மத். 25: 14-30) இயேசு கற்பித்தார்.

ஒன்றன்பின் ஒன்றாக கூறிய இந்த மூன்று உவமைகளைத் தொடர்ந்து, இயேசு, 'இறுதித் தீர்ப்பு உவமை'யைக் கூறினார். நாம் வழங்கவேண்டிய கணக்கு, எந்த நியதிகளின் அடிப்படையில் வழங்கப்படவேண்டும் என்பதை, இந்த உவமை தெளிவுபடுத்துகிறது.

'அயலவருக்கு நாம் என்ன செய்தோம்?' என்ற ஒரே ஒரு கேள்விதான், மறுவாழ்விற்குள் நாம் அடியெடுத்து வைக்க, அனுமதி தரும் நுழைவுச்சீட்டு. அதிலும், குறிப்பாக, தேவையில் இருக்கும் அயலவருக்கு நாம் என்ன செய்தோம் என்பது ஒன்றே மறுவாழ்வின் வாசலில் நம் வாழ்வை எடைபோடப் போகும் தராசு என்பதை, இயேசு கூறும் இந்த உவமை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

இயேசுவின் காலத்திற்கு முன்னர், இஸ்ரயேல் மக்களிடையே வாழ்ந்த இறைவாக்கினர்கள் அனைவரும் வலியுறுத்தி வந்த ஒரு கருத்தை, இயேசு இந்த உவமை வழியே மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். 'உனது மத நம்பிக்கையின் தரம், உனது நாட்டில் நிலவும் நீதியின் தரத்தைப் பொருத்தே தீர்மானிக்கப்படும்; அதிலும், குறிப்பாக, கைம்பெண்கள், அனாதைகள், அன்னியர் ஆகிய மூன்று குழுவினர் எவ்விதம் பாதுகாப்புடன், நலமாக வாழ்கின்றனர் என்பதே நாட்டின் நீதியை அளக்கும் தராசு' என்ற கருத்தை, பல இறைவாக்கினர்கள் பல வழிகளில் உணர்த்திச் சென்றுள்ளனர். இறைவாக்கினர்கள் உயர்த்திப் பிடித்த இந்தத் தராசை, இயேசு இந்த உவமை வழியே மீண்டும் உயர்த்திப் பிடித்துள்ளார்.

நாம் எத்தனை முறை கோவிலுக்குச் சென்றோம், எத்தனை மறைநூல்களைக் கற்றுத் தேர்ந்தோம், எத்தனை பக்தி முயற்சிகளில், திருப்பயணங்களில் பங்கேற்றோம், எத்தனை நாள் உண்ணா நோன்புகளைக் கடைபிடித்தோம் என்பவை, மறுவாழ்வில் நாம் நுழைவதற்கு, அளவு கோல்களாக இருக்காது. வறியோரிடமிருந்து பெறக்கூடிய பரிந்துரைக் கடிதம் இன்றி, மறுவாழ்வில் அடியெடுத்து வைக்கமுடியாது என்பதை 'இறுதித் தீர்ப்பு உவமை' மிகத் தெளிவாகக் கூறுகிறது.

"உன் சகோதரன் ஆபேல் எங்கே?" (தொ.நூல் 4:9) என்று தொடக்க நூலில் இறைவன் கேட்ட கேள்வி, பல இறைவாக்கினர்கள் வழியே பல வடிவங்களில் ஒலித்துள்ளது. நமது அயலவருக்கு நாம்தான் பொறுப்பு என்பதை மீண்டும், மீண்டும் இடித்துச்சொல்லும் இந்த நீதிக்குரல், மீண்டும் ஒருமுறை, 'இறுதித் தீர்ப்பு உவமை' வழியே நம் உள்ளங்களில் இடிபோல் இறங்கக் காத்திருக்கிறது. நம் மனதைத் திறந்து, இந்தக் குரலுக்குச் செவிமடுக்க, அடுத்தத் தேடலில் முயல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.