2015-08-25 15:58:00

ஆப்ரிக்க இளையோர் ஆப்ரிக்காவிலே தங்கி கட்டி எழுப்ப அழைப்பு


ஆக,25,2015. ஆப்ரிக்க இளையோர் தங்களின் பிரச்சனைக்கான தீர்வுகளை நாடுகளுக்கு வெளியே தேடாமல், நாட்டிலே தங்கி நல்லதொரு சமுதாயத்தை அமைப்பதற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் ஆப்ரிக்க ஆயர்கள்.

காங்கோ மக்களாட்சி குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் நடந்த ஆப்ரிக்க நாடுகளின் கத்தோலிக்க இளையோர் கூட்டத்தில் உரையாற்றிய, காங்கோ ஆயர் பேரவைத் தலைவரும், Tshumbe ஆயருமான Nicolas Djomo அவர்கள், ஆப்ரிக்க இளையோர் ஆப்ரிக்காவிலே தங்கி ஆப்ரிக்காவை கட்டி எழுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

ஆப்ரிக்க இளையோர், தவறான பண ஆசையில் சிக்கி, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இல்லாத தொழிலை அங்குத் தேடி, தங்களின் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறுகின்றனர் என்றுரைத்த ஆயர் Djomo அவர்கள், வாழ்வுக் கலாச்சாரமும், அறநெறி வாழ்வும், ஆன்மீக விழுமியங்களும் புதிய வடிவில் அழிக்கப்பட்டு வருவது குறித்து இளையோரை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆப்ரிக்காவில் நிலையான நீதி, அமைதி மற்றும் ஒப்புரவை வளர்ப்பதற்கு, இளையோர் தங்களின் திறமைகளையும், ஆப்ரிக்காவின் மற்ற வளங்களையும் பயன்படுத்துமாறும்  கேட்டுக்கொண்ட ஆயர் Djomo அவர்கள், ஆப்ரிக்கக் கண்டம் இளையோரைச் சார்ந்துள்ளது, இளையோர், ஆப்ரிக்கத் திருஅவைக்கு அவசியம் என்றும் கூறினார்.

ஆப்ரிக்காவில் எழுபது விழுக்காட்டினர் இளையோர் என்றும், ஆப்ரிக்க மக்களில் இளையோர் முக்கியமானவர்கள் என்றும், இச்செவ்வாயன்று நிறைவடைந்த 5 நாள் கூட்டத்தில் கூறப்பட்டது.  

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.