2015-08-24 16:19:00

இயேசு நமக்கு யார் என்ற கேள்வியை இதயத்தில் எழுப்புங்கள்


ஆக.24,2015. இவ்வுலகில் நமக்கென எவ்வளவோ இருந்தாலும், முடிவற்ற வாழ்வை அடைய நாம் கொள்ளும் ஏக்கத்தை நிறைவுச் செய்ய, இயேசு ஒருவராலேயே இயலும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இயேசு நமக்கு யார்?' என்ற கேள்வி, ஒவ்வொருவர் இதயத்திலும் எழுப்பப்பட வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தார்.

இயேசு நமக்கு யார் என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் எழுப்பி விடை காண முயலவேண்டும் என்ற விண்ணப்பத்தை, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின்போது, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்கள் முன்னால் வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கென சிறிது நேரம் மௌனம் காக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இயேசு என்பது வெறும் பெயரா?, ஒரு கருத்தா?, வரலாற்றின் ஒரு மனிதரா? அல்லது நமக்காக, தன் உயிரையே தியாகம் செய்து தற்போது நம்மோடு உடன் நடப்பவரா என்ற கேள்வியையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில் தூய பேதுரு கூறும் வார்த்தைகளான, 'ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன!' என்பதையும் எடுத்துரைத்து நினைவூட்டிய திருத்தந்தை, இறை வார்த்தையை, நற்செய்தி நூலை, வாசிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.