2015-08-22 15:40:00

மார் எலியான் துறவு இல்லம் அழிக்கப்பட்டதற்கு WCC கண்டனம்


ஆக.22,2015. சிரியாவில் Elian துறவு இல்லம் அழிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, சிரியாவில் அமைதி நடவடிக்கைக்கு உலகினர் ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளது WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம்.

சிரியாவில், மக்களும் கலாச்சார நினைவிடங்களும் அழிக்கப்படுவது நிறுத்தப்படுமாறு விண்ணப்பித்துள்ள WCC மன்றப் பொது செயலர் பாஸ்டர் Olav Fykse Tveit அவர்கள், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவு இல்லம் அழிக்கப்பட்டுள்ளது, ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் தீவிரவாதத்தின் மற்றுமோர் அடையாளமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஐ.எஸ். அரசின் தீவிரவாதிகள், சிறுபான்மை மதங்களின் உறுப்பினர்களை மட்டுமல்லாமல், அவர்களின் இருப்பிற்கும், அவர்கள் வரலாற்றுக்கும், அப்பகுதியின் கலாச்சாரத்திற்கும் அளித்துள்ள பங்கிற்கும் சான்றுகளாக உள்ள அனைத்து இடங்களையும் ஒழித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் Tveit.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசு, கிறிஸ்தவர்களுக்கு எதிராக மட்டுமின்றி, அந்த அரசின் குறுகிய தீவிரவாத உலகக் கண்ணோட்டத்திற்கு ஒத்துவராத மக்கள் மற்றும்  அனைத்துப் பொருள்களுக்கு எதிராகப் போர் தொடுக்கின்றது என்றும் Tveit அவர்கள் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஹோம்ஸ் நகருக்கு அருகிலுள்ள Qaryatain நகரம், இம்மாதம் 6ம் தேதி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்னர் 1,800 கிறிஸ்தவர்கள் அங்கு வாழ்ந்தனர். அவர்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பிணையல் கைதிகளாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.