2015-08-22 15:09:00

பொதுக் காலம் 21ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


"மான்ஜி - மலை மனிதர்" (Manjhi - The Mountain Man) என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 21) வெளியானது. 'தஷ்ரத் மான்ஜி' (Dashrath Manjhi) என்ற தனியொரு மனிதர், 22 ஆண்டுகளாக ஒரு குன்றை வெட்டியெடுத்து, அதன் நடுவே பாதையொன்றை அமைத்த வரலாறு, திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம், வசூலையும், விருதுகளையும் பெறக்கூடும். ஆனால், இத்திரைப்படம் உருவாக அடித்தளமாக இருந்த தஷ்ரத் மான்ஜி அவர்கள், எவ்வித விருதும் பெறாமல், தன் 73வது வயதில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் சென்றார்.

1959ம் ஆண்டு தஷ்ரத் மான்ஜி அவர்களின் துணைவியார், ஃபால்குனி தேவி (Falguni Devi) அவர்கள், சரியான நேரத்தில், மருத்துவ உதவி பெறாததால் மரணமடைந்தார். அவர்கள் வாழ்ந்த கிராமத்திற்கு அருகிலிருந்த மருத்துவமனையை அடைய ஒரு கிலோமீட்டர் தூரமே என்றாலும், நடுவே ஒரு குன்று வழிமறித்து நின்றதால், அவர்கள் அந்தக் குன்றைச் சுற்றி, ஏறத்தாழ 70 கி.மீட்டர் பயணம் செய்து மருத்துவமனையை அடையவேண்டியிருந்தது. அந்த நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியாமல், ஃபால்குனி தேவி இறந்தார்.

தன் மனைவியைப் பறிகொடுத்த தஷ்ரத் மான்ஜி அவர்கள், அடுத்த ஆண்டுமுதல் (1960), ஒவ்வொருநாளும், அந்த குன்றைத் தகர்க்கத் துவங்கினார். ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அவர் அந்தப் பணியைத் துவக்கியபோது, கிராமத்து மக்கள் அனைவரும், அவரை மதியிழந்தவர் என்று கேலி செய்தனர். மான்ஜி அவர்கள் மதியிழக்கவில்லை, மனமும் தளரவில்லை. 22 ஆண்டுகளுக்குப் பின், 1982ம் ஆண்டு, அவர் அந்தப் பணியை முடித்தபோது, குன்றின் சிகரத்திலிருந்து 25 அடி ஆழத்தில், 360 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட ஒரு பாதையை மான்ஜி அவர்கள் தனியொருவராக உருவாக்கியிருந்தார். அவர் அமைத்தப் பாதையால், அடுத்த ஊருக்குச் செல்லும் தூரம், 70 கி.மீ.லிருந்து, 1 கி.மீ.ஆகக் குறைந்தது. தன் சொந்த நலனையும், குடும்பத்தையும் மறந்து, மனம் தளரும்படி ஊர் மக்கள் சொன்ன கேலிப் பேச்சுக்களைப் புறந்தள்ளி, தஷ்ரத் மான்ஜி அவர்கள், 22 ஆண்டுகள், அதாவது, 8000த்திற்கும் அதிகமான நாட்கள், ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அந்தக் குன்றைக் கரைத்ததற்குக் காரணம்... அவர் தன் மனைவியின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு.

தஷ்ரத் மான்ஜி அவர்களின் மரணத்திற்குப் பிறகு, பீகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில், மான்ஜி அவர்கள் உருவாக்கிய பாதையை, உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலுடன் ஒப்பிட்டுப் பேசியவர்கள் உண்டு. இந்த ஒப்புமைக்கு ஒரு முக்கியக் காரணம், அந்த மலைப்பாதையும், தாஜ்மஹாலும் உருவாக, அடிப்படையாக அமைந்தது... மனைவி மீது கொண்ட ஆழ்ந்த அன்பு.

மன்னர் ஷாஜஹான், தன் கனவில் உருவாக்கியிருந்த காதல் சின்னத்தை, பெருமளவு செல்வத்தைக் கொண்டு, பல்லாயிரம் தொழிலாளர்களைப் பயன்படுத்தி, நனவாக்கினார். மான்ஜி அவர்களோ, தன் கனவில் கண்ட அந்தப் பாதையை, தன் இரு கைகளைக் கொண்டு நனவாக்கினார். அந்தக் குன்றைக் குடைவதற்கு, அவர் சுத்தியலும், உளியும் வாங்க, தன் ஒரே சொத்தான ஆட்டுக் குட்டியை விற்றார் என்றும் சொல்லப்படுகிறது.

தஷ்ரத் மான்ஜி அவர்களைப் பற்றி நான் இவ்வளவு விரிவாகப் பேசுவதற்கு இரு காரணங்கள் உண்டு. "தனி மனித சக்தியை, குறைத்து மதிப்பிட வேண்டாம்" என்ற தலைப்பில், ஆறு மாதங்களுக்கு முன், என்னை வந்தடைந்த ஒரு மின்னஞ்சல் வழியே, மான்ஜி அவர்கள் எனக்கு அறிமுகமானார். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், அவரைப் பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள முயன்றேன். 'பாரத இரத்னா' என்ற விருதுக்கு இவர் தகுதியானவர் என்று பீகார் மாநில அதிகாரிகள் சொன்னபோது, அதை முழுமையாக ஆதரித்தேன். மான்ஜி அவர்களுக்கு, இந்தியக் குடியரசு இந்த விருதை வழங்கினால், அது அந்த விருதுக்குக் கிடைக்கும் கூடுதல் மதிப்பு என்பது என் கருத்து. மான்ஜி அவர்களுக்கு இந்திய அரசு விருதுகள் வழங்கவில்லையெனினும், அவர் பல்லாயிரம் மக்களின் மனங்களில் தனியொரு அரியணையில் வீற்றிருப்பார் என்பதை நான் உணர்கிறேன். அந்த மாமனிதருக்கு இந்த ஞாயிறு சிந்தனை வழியாக நான் செலுத்தும் அஞ்சலியே என் பகிர்வு. இதன் வழியாக, அவர் உங்கள் உள்ளங்களிலும் அரியணை பெற்றால் மகிழ்வேன். இது, இவரைக் குறித்து நான் பேசுவதற்கு, முதல் காரணம்.

இரண்டாவது காரணம்... இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் வழியே நமக்கு உணர்த்தப்படும் ஒரு மனிதத் திறமை... அதுதான், முடிவெடுக்கும் திறமை. மனித குலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்தத் திறமையை நமக்கு நினைவுறுத்துவது... இன்றைய வாசகங்களில், யோசுவா, மற்றும் புனித பேதுரு ஆகியோர் கூறும் இரு கூற்றுகள்:

"நானும் என்  வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" (யோசுவா 24: 15) என்று யோசுவா சொல்வதை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம். யோவான் நற்செய்தியில், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" (யோவான் நற்செய்தி 6: 68) என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைப் பதிலாகச் சொல்கிறார், சீமோன் பேதுரு. உறுதிகொண்ட நெஞ்சுடன் இருவர் எடுத்த முடிவைப்  பறைசாற்றும் கூற்றுகள் இவை.

நமது பகுத்தறியும் திறனைப் பயன்படுத்தி, காரண, காரியங்களை அலசி, ஆராய்ந்து, கணக்குப் பார்த்து முடிவெடுப்பது ஒரு வகை. வர்த்தக உலகிலும், அரசியல் உலகிலும், எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும், இந்த யுக்தி பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம்.

பகுத்தறியும் திறனையும் தாண்டி, பரிதவிக்கும் மனதையும், பரந்து விரிந்த ஒரு கண்ணோட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு, முடிவெடுப்பது, மற்றுமோர் உயர்ந்த வகை. இத்தகைய முடிவுகள் அறிவிலிருந்து பிறப்பதைக் காட்டிலும், ஆழ்மனதிலிருந்து பிறக்கும். இத்தகையதோர் முடிவை செயல்படுத்தியவர், தஷ்ரத் மான்ஜி அவர்கள். யோசுவாவும், பேதுருவும் கூறும் வார்த்தைகள், உள்ளத்திலிருந்து எழும் முடிவுகளாக ஒலிக்கின்றன.

முடிவுகள் எடுக்கப்படும் சூழலைச் சிந்திக்கவும், இன்றைய வாசகங்கள் வாய்ப்பு தருகின்றன. வாழ்வில் எல்லாமே நலமாகச் செல்லும் வேளைகளில், முடிவுகள் எடுக்கும் தேவையே எழுவதில்லை. அந்நேரங்களில் சிறு, சிறு முடிவுகள் தேவைப்பட்டால், அவை எளிதாக எடுக்கப்படும். ஆனால், நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் என்று பல வடிவங்களில் சவால்கள் நம்மை நெருக்கும்போது, முடிவுகள் எடுப்பது, கடினமாக இருக்கும். எதை நம்பி முடிவெடுப்பது? யாரை நம்பி முடிவெடுப்பது?

முக்கியமான முடிவெடுக்கும் சூழல்களில், எத்தனையோ பல காரணிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இறுதியில், நம்மையும், கடவுளையும் நம்பியே, இந்த முடிவுகளை எடுக்கமுடியும். இப்படிப்பட்ட ஓர் உணர்வையே, பேதுரு தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.

யோவான் நற்செய்தி 6: 68-69

“ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்.”

"வேறு யாரிடம் போவோம்?" என்று பேதுரு கூறுவதை, "உம்மைவிட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை" என்ற அவநம்பிக்கை வார்த்தைகளாகவும் நம்மால் காணமுடியும். ஆனால், பேதுருவின் நிலை அதுவல்ல. அவரும் அவரது நண்பர்களும் மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள். கடலையும், படகையும், வலைகளையும் நம்பி, அவர்கள் வாழ்ந்துவந்த அந்த பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்த பாதுகாப்பற்ற வாழ்வு, அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. அந்த வாழ்வு, உணவு, உடை, உறைவிடம், எதிர்காலச் சேமிப்பு என்று எவ்வகையிலும் உறுதியற்ற வாழ்வாக இருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளில் அவர்கள் அனைத்தையும் கண்டனர். இந்த உணர்வுகளைத்தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. பேதுருவும், ஏனையச் சீடர்களும், இயேசுவுடன் தங்குவதற்கு எடுத்த அந்த முடிவு, கொடூரமான மரணம் வரை அவர்களை அழைத்துச் சென்றபோதும், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருந்ததால், சக்திமிகுந்த சாட்சிகளாக இன்றும் வாழ்கின்றனர்.

Forbes என்ற அமெரிக்க இதழில், உலகின் சக்திமிகுந்த பெண்களின் பட்டியல் ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும். அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், மனிதாபிமானச் செயல்கள், ஊடகம் என்ற பல துறைகளில் புகழ்பெற்றவர்களாக விளங்கும் 100 பெண்களின் பெயர்கள் வெளியாகும். சக்திமிகுந்த பெண்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தப் பட்டியலில், சுபாசினி மிஸ்திரி (Subhasini Mistry) என்ற வங்காளப் பெண்ணின் பெயர் இடம் பெற்றுள்ளதா என்று நான் தேடினேன். கிடைக்கவில்லை. அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெண்களுக்கு ஈடாக, ஏன், அவர்களைவிட கூடுதல் சக்திமிகுந்தவராக வாழ்ந்தவர், சுபாசினி மிஸ்திரி அவர்கள். அந்த அன்னையை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

இவரைப் பற்றிய விவரங்களை முழுமையாகக் கூற இங்கே நேரம் இல்லை. சுபாசினி அவர்களுக்கு, தற்போது 70க்கும் மேல் வயதாகிறது. இவரது கணவர், தெருவில் காய்கறி விற்கும் வேலை செய்தார். சுபாசினிக்கு 23 வயதானபோது, இவர் கணவர் ஒருநாள் வயிற்றுவலியால் துடிக்க, சுபாசினி, அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றார். அது ஓர் அரசு மருத்துவமனை என்றாலும், அங்கிருந்தவர்கள் இவரிடம் பணம் எதிர்பார்த்தனர். சுபாசினியிடம் பணம் இல்லாததால், அவரது கணவரை யாரும் கவனிக்கவில்லை. அவர் வலியில் துடிதுடித்து இறந்தார்.

அந்நேரத்தில், சுபாசினி அவர்களின் மனதில் ஒரு முடிவு உருவானது. தான் எப்படியும் ஒரு மருத்துவமனையை எழுப்பி, அங்கு, ஏழைகளுக்கு, உடனடியான, இலவசமான உதவிகள் செய்யவேண்டும் என்ற முடிவு அது. இதை ஒரு சபதம் என்றே சொல்லவேண்டும். அவரது சபதத்தைக் கேட்ட மற்றவர்கள், அவரை எள்ளி  நகையாடினர். வீதியில் காய்கறி விற்கும் சுபாசினியின் இந்த சபதம், ஏழேழு பிறவி எடுத்தாலும், எட்டமுடியாத ஒரு கனவு என்றே திரும்பத் திரும்பச் சொல்லிவந்தனர். சுபாசினி, இந்த முடிவெடுத்த பின், இருபது ஆண்டுகள் அயராது உழைத்தார். தன் மகன் Ajoy Mistry அவர்களை மருத்துவம் படிக்கவைத்தார். இவ்விருவரின் தளராத முயற்சியால், Humanity Hospital - மனிதாபிமான மருத்துவமனை - இன்று வங்காளத்தின் Hanspukurல் உயர்ந்து நிற்கிறது.  

கட்டடம் என்ற அளவிலோ, மருத்துவ வசதிகள் என்ற அளவிலோ இம்மருத்துவமனை பிரம்மாண்டமாக உயரவில்லை, ஆனால் வறியோரின் மனதில் ‘மனிதாபிமான மருத்துவமனை’ ஒரு கோவிலாக உயர்ந்து நிற்கிறது. சுபாசினி என்ற ஓர் ஏழைப் பெண், தான் அனுபவித்த மிகக் கொடிய துன்பத்தின் நடுவில் எடுத்த ஒரு முடிவு, இன்று பல நூறு ஏழைகளைக் காப்பாற்றும் ஒரு கோவிலாக நிற்கிறது.

இவரைப் பற்றிய கட்டுரையொன்று The Weekend Leader என்ற இதழில் வெளியானது. இந்தக் கட்டுரையின் ஆசிரியர் அனிதா பிரதாப் அவர்கள், சுபாசினி மிஸ்திரி அவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்டார்: "எப்படி உங்களால் இவ்வளவு சாதிக்க முடிந்தது?" என்று அவர் கேட்டதற்கு, . சுபாசினி அவர்கள் சொன்ன பதில் நமக்கு இன்று பாடமாக அமைகிறது.

"என் வாழ்வின் மிகவும் இருளான நாளன்று கடவுள் எனக்கு ஒளி தந்தார். அன்றிலிருந்து என் வாழ்வில் ஒரு குறிக்கோள் இருந்ததாக நான் உணர்கிறேன். கடவுள் எனக்குக் கொடுத்த சக்தியை நான் எடுத்த ஒரே ஒரு முடிவுக்காகப் பயன்படுத்தினேன். ஏழை என்ற ஒரே காரணத்திற்காக, ஒருவர் தனது அன்பு உறவின் மரணத்தைக் காணக்கூடாது என்பதே அம்முடிவு." என்று சுபாசினி அவர்கள், அக்கட்டுரையின் ஆசிரியரிடம் சொன்னார்.

தங்கள் சொந்த வாழ்வில் பெரும் துயரங்களைச் சந்தித்தாலும், அத்துயரங்களின் பாரத்தால் நொறுங்கிப் போகாமல், அத்துயரங்களை மற்றவர்கள் அடையக் கூடாது என்ற மேலான எண்ணத்துடன், ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுத்து, அவற்றிற்கு செயல்வடிவம் கொடுத்த தஷ்ரத் மான்ஜி, சுபாசினி மிஸ்திரி போன்ற உயர்ந்த உள்ளங்களுக்காக இறைவனுக்கு இன்று சிறப்பான நன்றி செலுத்துவோம். இவர்கள் உள்ளத்தில் தோன்றிய அந்த உறுதியில், ஒரு சிறிதளவாகிலும், நம் உள்ளத்திலும் தோன்ற, இறைவனை இறைஞ்சுவோம்.

வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் அன்புள்ளங்களை இப்போது இறைவன் பாதத்திற்குக் கொணர்வோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.