2015-08-22 15:34:00

சிரியாவைக் காப்பாற்றுவதற்கு பன்னாட்டு உதவிக்கு விண்ணப்பம்


ஆக.22,2015. சிரியாவில் பழம்பெருமை மிக்க Mar Elian கத்தோலிக்க துறவு இல்லம் அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளவேளை, சிரியாவைக் காப்பாற்றுமாறு பன்னாட்டு சமுதாயத்தைக் கேட்டுள்ளார் சிரியாவிலுள்ள திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி.

சிரியாவின் ஹோம்ஸ் மாநிலத்தில் al-Qaryataynலுள்ள Mar Elian துறவு இல்லத்தை ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழித்துள்ளதை முன்னிட்டு அனைத்துலக சமுதாயத்தின் உதவிக்கு இவ்வெள்ளியன்று விண்ணப்பித்துள்ள பேராயர் செனாரி அவர்கள், சிரியா குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, புதிய நம்பிக்கையைத் தருகின்றது என்று கூறினார்.

சிரியாவில் நான்கரை ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரால் அந்நாடு, ஜிகாதி போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறிய பேராயர் செனாரி அவர்கள், வருகிற செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள், சிரியாவின் பிரச்சனைக்குத் தீர்வைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த மே மாதத்தில் கைது செய்யப்பட்ட Mar Elian துறவு இல்லத் தலைவர் அருள்பணி Jacques Mourad அவர்கள் பற்றிய விபரங்கள் இதுவரை எதுவும் தெரியவில்லை.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டுள்ள Mar Elian துறவு இல்லம் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்துறவு இல்லத்திலுள்ள புனித Elian ஆலயம் 432ம் ஆண்டில் கட்டப்பட்டது. ஹோம்ஸ் நகரில் பிறந்த மறைசாட்சி புனித Elian அவர்கள், 284ம் ஆண்டில் உரோமையர்களால் கொல்லப்பட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.