2015-08-22 15:53:00

Cremisan பள்ளத்தாக்கில் பிரிவுச்சுவர்- கண்டனம்


ஆக.22,2015. புனித பூமியின் Cremisan பள்ளத்தாக்கில், பிரிவுச் சுவர் கட்டுமானப் பணியை  மீண்டும் தொடங்குவதற்கு இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர் தென்னாப்ரிக்க கத்தோலிக்க ஆயர்கள்.

பாலஸ்தீனாவின் West Bank பகுதியைப் பிரிக்கும் பிரிவுச் சுவர் கட்டுமானப் பணி, எருசலேமுக்குத் தெற்கே ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையுடைய ஏறக்குறைய ஐம்பது ஒலிவ மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

இஸ்ரேல் அரசின் இந்நடவடிக்கை குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள தென்னாப்ரிக்க ஆயர்கள், இந்தச் சுவர் 58 கிறிஸ்தவக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களையும், வாழ்வின் தரத்தையும் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

இக்கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு சலேசிய அருள்சகோதரிகள் வழங்கிவரும் மேய்ப்புப்பணி உதவிகள் தடைபடும் என்றும் கூறியுள்ள கேப் டவுண் பேராயர் Stephen Brislin அவர்கள், West Bank பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்களை நினைக்கும்போது, தென்னாப்ரிக்காவின் கடந்தகால நிறவெறிக் கோட்பாடே நினைவுக்கு வருகின்றது என்றும் கூறினார்.

எல்லாருக்கும் நீதி கிடைக்கும் வழிகளை ஆராய்வதன் வழியாக மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்றுரைத்த பேராயர் Brislin அவர்கள், புனித பூமியில் வாழும் கிறிஸ்தவர்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.