2015-08-21 14:53:00

கொலம்பிய அமைதிப்பேச்சுவார்த்தைக்குத் திருப்பீட பார்வையாளர்


ஆக.21,2015. "தினமும் நற்செய்தியை வாசிப்பது, நாம் தன்னலத்தினின்று வெளியேறவும், மிகுந்த அர்ப்பணத்தோடு நம் ஆசிரியராம் இயேசுவைப் பின்செல்லவும் நமக்கு உதவுகின்றது" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

‏@Pontifex  என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் ஏறக்குறைய எல்லா நாள்களிலும் ஒன்பது மொழிகளில் சிந்தனைகள் வெளியிடப்படுகின்றன. 

மேலும், கியூபா நாட்டுத் தலைநகர் ஹவானாவில் நடைபெற்றுவரும் கொலம்பிய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் திருப்பீடத்தின் பார்வையாளராக கொலம்பிய ஆயர் பேரவைத் தலைவரைப் பரிந்துரை செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கொலம்பியாவின் Tunja பேராயர் Luis Augusto Castro Quiroga அவர்களை இப்பேச்சுவார்த்தைகளுக்குப் பரிந்துரை செய்துள்ள திருத்தந்தை, இவ்வழியாக கொலம்பியாவின் அமைதி நடவடிக்கைகளுக்குத் தான் ஆதரவு வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.

தான் பரிந்துரைத்துள்ள நபர், கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக்குழுவுக்கும் ஏற்புடையவராய் இருப்பார் என்ற நம்பிக்கையையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. 

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக்குழுவுக்கும் இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் ஆயுதம் தாங்கிய மோதல்களில், இதுவரை 2,20,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 25,000த்திற்கும் அதிகமானோர் தலைமறைவாகியுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.