2015-08-20 15:58:00

ரிமினியில் நடைபெறும் கூட்டத்திற்கு திருத்தந்தை ஆசீர்


ஆக.20,2015. புனித அகஸ்தின் கூறுவதுபோல், நமது இதயம் அமைதியின்றி அலைகிறது என்றும், அந்த இதயத்தை மையப்படுத்தி நடத்தப்படும் நட்புக் கூட்டத்திற்கு திருத்தந்தை தன் ஆசீரை வழங்குகிறார் என்றும், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் 20, இவ்வியாழன் முதல், 26, வருகிற புதன் முடிய, இத்தாலியின் ரிமினி (Rimini) என்ற இடத்தில் நடைபெறும் 36வது ஆண்டு கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக, கர்தினால் பரோலின் அவர்கள் வழங்கியுள்ள செய்தியில், பல்வேறு மனிதர்கள் மத்தியில் நட்புறவு மலரக்கூடும் என்பதற்கு இந்தக் கூட்டம் ஒரு சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.

"தேவை, தேவை என்று அலையும் இதயமே, திடீரென நீ நிறைவடைவது எவ்விதம்?" என்று இத்தாலியக் கவிஞர், மாரியோ லூசி (Mario Luzi) அவர்கள் எழுதியுள்ள வரிகளை தங்கள் ஆண்டுக் கூட்டத்தின் மையப்பொருளாக தேர்ந்துள்ளதை, கர்தினால் பரோலின் அவர்கள் பாராட்டியுள்ளார்.

அமைதியின்றி அலைபாயும் இதயத்தைக் குறித்து புனிதர்களும், திருத்தந்தையரும் கூறியுள்ள சில எண்ணங்களை தன் செய்தியில் மேற்கோளாகக் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இதயத்தின் உண்மையான ஏக்கங்களைப் புரிந்து நடந்துகொள்வது, நமக்கு முன் உள்ள பெரும் சவால் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதயத்தின் ஏக்கங்களை, இயேசுவும், அவர் வழங்கியுள்ள நற்செய்தியும் நிரப்பவேண்டும் என்பதை, ரிமினியில் கூடியுள்ள அனைவரும் உணரவேண்டும் என்பது திருத்தந்தையின் விருப்பமும், செபமும் என்று கர்தினால் பரோலின் அவர்கள், தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.