2015-08-20 16:08:00

மதப் பாரம்பரியத்தில் குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவால்


ஆக.20,2015. கென்யாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குக் குடியேறியுள்ளவர்கள், தங்கள் தாய்நாட்டின் பாரம்பரிய, ஆன்மீக நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ள அந்நியக் கருத்துக்களால் அலைகழிக்கப்படக் கூடாது என்று, கென்யா நாட்டு கர்தினால் ஒருவர் கூறினார்.

கென்யாவின் நைரோபியில் பேராயராகப் பணியாற்றும் கர்தினால் John Njue அவர்கள், அமெரிக்காவின் டெலவேர் நகரில் அண்மையில் ஆற்றிய ஒரு திருப்பலியில் இவ்வாறு அறிவுரை வழங்கினார்.

விவிலியம், கத்தோலிக்க நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் குழந்தைகளை வளர்ப்பது, பெற்றோரின் தலையாயக் கடமை என்று வலியுறுத்திய கர்தினால் Njue அவர்கள், தனிப்பட்டோர் சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் குழந்தைகள் வளர்வது ஆபத்து என்று எடுத்துரைத்தார்.

பிழைப்பு தேடி, கென்யாவை விட்டு வெளியேறியுள்ள குடும்பங்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம் என்று குறிப்பிட்ட கர்தினால் Njue அவர்கள், மதம் தொடர்பான பாரம்பரியத்தில் குழந்தைகளை வளர்ப்பதும் ஒரு  பெரும் சவால் என்று சுட்டிக்காட்டினார். 

ஆதாரம் : CISA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.