2015-08-20 15:56:00

நீண்ட நேர வேலை - மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும் ஆபத்து


ஆக.20,2015. ஒருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும், அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஒரு புதிய ஆய்வு கூறியுள்ளது.

ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைநேர மற்றும் உடல்நலத் தரவுகளைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்தரவுகளின் அடிப்படையில், வாரத்திற்கு ஐம்பத்து ஐந்து மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை பார்ப்பவர்களுக்கு, வாரத்திற்கு நாற்பது மணி நேரத்துக்கும் குறைவான நேரம் வேலை பார்ப்பவர்களைக் காட்டிலும் மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரியவருகிறது.

தி லான்செட் (The Lancet) என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ள மருத்துவர் Mika Kivimaki அவர்கள், இந்த ஆய்வு, முதல் கட்ட அளவிலேயே உள்ளது என்றாலும், இந்த முடிவுகள் தரும் அபாய அடையாளங்களைப் புரிந்துகொள்வது நல்லது என்று கூறினார்..

கூடுதல் நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு, இருதய நோய் வரும் ஆபத்தும் அதிகரிப்பதாக, மருத்துவர் Tim Chico அவர்கள், மற்றொரு ஆய்வின் வழியே கண்டறிந்துள்ளார்.

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.