2015-08-20 15:01:00

கடுகு சிறுத்தாலும் – தவறை ஏற்பவருக்கு ஆன்மபலம் அதிகம்


ஒருநாள், துறவி ஃபுகாய்(Fugai) அவர்கள் ஆசிரமத்தில் உணவு தயாரிப்பதில் தாமதம் ஏற்படும்படியான சூழல் உருவானது. தோட்டத்திற்குச் சென்ற சமையல்காரர் அவசரத்தில் பச்சைக் காய்கறிகளின் மேல்பகுதியை வெட்டி எல்லாவற்றையும் ஒன்றாகத் துண்டாக்கி சூப் தயாரித்தார். அந்த அவசரத்தில், தெரியாமல் காய்கறிகளின் மேல் இருந்த பச்சைப் பாம்பையும் துண்டாக்கிச் சமைத்துவிட்டார். துறவியைக் காணவந்த எல்லாருக்கும் சூப் பரிமாறப்பட்டது. இவ்வளவு சுவையான சூப்பைத் தாங்கள் அருந்தியதில்லை எனச் சொல்லிக்கொண்டு எல்லாரும் அருந்தினர். ஆனால் துறவிக்குக் கொடுக்கப்பட்ட சூப் கிண்ணத்தில் பாம்பின் தலை கிடந்தது. உடனே துறவி சமையல்காரரை அழைத்து, இது என்ன? என்று கோபத்துடன், பாம்பின் தலையை மேலே தூக்கிக் காண்பித்தார். நன்றி குருவே என்று பதில் சொன்ன சமையல்காரர், அதை வாங்கி, உடனே தனது வாயில் போட்டு மென்று முழுங்கிவிட்டார். “பழியை உண்ணுதல்” என்ற தலைப்பைக் கொண்ட இக்கதையில், சமையல்காரர் தனது தவறை ஏற்றது மட்டுமல்லாமல், சூப்பை சுவைத்துச் சாப்பிட்டவர்களுக்கு அது பாம்பின் தலை என்று தெரிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் இப்படிச் செய்தார். ஆனால், அதைப் பார்த்த மற்றவர்களோ, துறவி ஏதோ சுவையான காயை சமையல்காரருக்குக் கொடுத்தார் என்றே நினைத்திருப்பார்கள். தனது குரு தனக்கு ஏதோ சுவையான காயைத் தருவதாக வெளியில் காட்டிக்கொண்டு, நன்றி குருவே என்று சொல்லி அதை உடனே சாப்பிட்ட சமையல்காரர் ஆன்மபலம் மிக்கவர்தான், பெரிய ஞானிதான்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.