2015-08-20 16:19:00

இஸ்ரேல் எழுப்பிவரும் பிரிவுச் சுவர், அமைதிக்கு அவமானம்


ஆக.20,2015. புனித பூமியின் Cremisan பள்ளத்தாக்கில் இஸ்ரேல் அரசு எழுப்பிவரும் பிரிவுச் சுவர், அமைதி என்ற நன்னெறி விழுமியத்திற்கு இழைக்கப்படும் அவமானம் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஆகஸ்ட் 17, இத்திங்கள் முதல் இஸ்ரேல் அரசு புல் டோசர்கள் கொண்டு துவங்கியுள்ள இந்த பிரிவுச் சுவர் கட்டுமான முயற்சி, அவமானமும், கொடுமையும் நிறைந்த ஒரு செயல் என்று இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் சார்பில் பேசிய ஆயர் Declan Lang அவர்கள் கூறினார்.

தங்கள் ஆண்டுக் கூட்டத்திற்காக கூடியுள்ள தென் ஆப்ரிக்க ஆயர்களும், இஸ்ரேல் அரசின் அநீதமான இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டுமென்று அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

இந்தப் பிரிவுச் சுவர் கட்டுமானத்தால், 58 கிறிஸ்தவக் குடும்பங்கள் எவ்வித வாழ்வாதாரமும் இன்றி அகற்றப்படுவது பெரும் அநீதி என்றும் தென் ஆப்ரிக்க ஆயர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீன அரசுகளுக்கு இடையே சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வரும் எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Faoud Twal அவர்களுடனும், ஏனைய ஆயர்களுடனும் தாங்களும் இந்த சமாதான முயற்சிகளில் இணைவதாக, தென் ஆப்ரிக்க ஆயர்களின் அறிக்கை கூறுகிறது. 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.