2015-08-20 16:07:00

'இறைவா உமக்கே புகழ்' - பிறமதத்தவருக்கும் பயன்தரும் மடல்


ஆக.20,2015. இவ்வுலகம், பணம் படைத்தவர்களுக்கு மட்டும் அல்ல, மாறாக, அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள ஓர் அழகிய கொடை என்ற உண்மையை, நமது அடுத்தத் தலைமுறைக்கு உணர்த்துவது நம் தலைமுறைக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு தார்மீகக் கடமை என்று ஆசிய கர்தினால் ஒருவர் கூறினார்.

இந்தோனேசிய ஆயர் பேரவையின் பிரதிநிதிகளுடன், அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், ஜகார்த்தாவில் மேற்கொண்ட ஒரு சந்திப்பின்போது இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் வெளியிட்ட 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் தாக்லே அவர்கள், திருத்தந்தையின் திருமடல், கத்தோலிக்கர் அல்லாதோருக்கும் பயன்தரும் ஒரு மடல் என்று குறிப்பிட்டார்.

இவ்வுலகுடனும், இயற்கை அனைத்துடனும் நட்புறவுடன் வாழும் வகையில் முடிவுகளை எடுக்க, அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், மற்றும் சட்டங்களை இயற்றுவோர் அனைவரையும் வழிநடத்திச் செல்லும் கடமை, நம் அனைவருக்கும் உள்ளதென்று கர்தினால் தாக்லே அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

அனுபவம், அதன் வழி பிறக்கும் சிந்தனை, முடிவு என்று புனித லொயோலா இஞ்ஞாசியார் வழங்கியுள்ள ஆன்மீக வழிகளை, திருத்தந்தையின் திருமடல் வெளிப்படுத்துகிறது என்பதையும் கர்தினால் தாக்லே அவர்கள் இந்தோனேசிய ஆயர்களிடம் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.