2015-08-19 15:56:00

ஐ.நா. பொதுச்செயலரின் உலக மனிதாபிமான நாள் செய்தி


ஆக.19,2015. மனிதாபிமானம் நிறைந்த ஓர் உலகை உருவாக்க, நாம் ஒவ்வொருவரும் மாற்றங்களை உருவாக்க முடியும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 19, இப்புதனன்று கொண்டாடப்படும் உலக மனிதாபிமான நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், இன்றைய நெருக்கடிகளால் அடிப்படை மனித மாண்பை இழந்து தவிக்கும் தனி மனிதர்களும், குடும்பங்களும் மீண்டும் தங்கள் மாண்பைக் கண்டுணர வழிவகுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று கூறியுள்ளார்.

பல்வேறு ஆபத்தான சூழல்களிலிருந்து மனித உயிர்களை காப்பது மட்டும் போதாது, அவர்கள் தொடர்ந்து பாதுகாப்புடனும், அடிப்படை மாண்புடனும் வாழ்வதற்கு வழி அமைத்துத் தருவதும் நம் கடமை என்று ஐ.நா. உயர் அதிகாரி, Stephen O'Brien அவர்கள் கூறினார்.

உலகெங்கிலும் மனிதாபிமானப் பணிகளில் சிகரங்களைத் தொடும் பலரை, உலகம் அறிந்துகொள்ளும் வகையில், சமூக வலைத்தளங்கள் வழியே அவர்களின் வீரச் செயல்களை விளம்பரப்படுத்தும் முயற்சியில், ஐ.நா.வின் சமூகத் தொடர்புத் துறை, இவ்வாண்டு, குறிப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

2003ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி, பாக்தாத் நகரில், அந்நாட்டின் ஐ.நா. தலைமையகம் தாக்கப்பட்டபோது, அத்தலைமையகத்தின் பொறுப்பாளர், Sergio Vieira de Mello உட்பட, 22 ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 19ம் தேதி, உலக மனிதாபிமான நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.