2015-08-19 15:41:00

உலக மனிதாபிமான நாள் நிகழ்ச்சிகளில் காரித்தாஸ் பங்கேற்பு


ஆக.19,2015. ஆகஸ்ட் 19, இப்புதனன்று கொண்டாடப்பட்ட உலக மனிதாபிமான நாளையொட்டி, ஐ.நா. அவை பரிந்துரைத்த அனைத்து முயற்சிகளிலும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட்டது.

உலகின் பல்வேறு நாடுகளில் மனிதாபிமானப் பணிகளில் தங்களையே அர்ப்பணித்துள்ளோரைச் சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் உலக மனிதாபிமான நாளன்று, மிலான் நகரில் நடைபெற்றுவரும் அகில உலகக் கண்காட்சியில், ஐ.நா.அவையுடன் இணைந்து, காரித்தாஸ் அமைப்பும் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டது.

இதற்கிடையே, இத்தாலியின் ஜெனீவா நகரில், மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் காரித்தாஸ் தலைவர், ஆயர் Dieudonné Nzapalainga அவர்களுக்கு, ஐ.நா. அவையின் Sergio Vieira de Mello விருது வழங்கப்பட்டது.

ஆயர் Nzapalainga அவர்களுடன், இஸ்லாமிய மதத் தலைவர், Oumar Kobine Layam அவர்களும், கிறிஸ்தவப் போதகர், Nicolas Guérékoyaméné-Gbangou அவர்களும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் நிலவிவரும் மோதல்களைத் தீர்ப்பதற்கு, உரையாடல் முயற்சிகளை மேற்கொண்ட காரணத்தால், இந்த விருது மூவருக்கும் வழங்கப்பட்டது.

2003ம் ஆண்டு பாக்தாத் நகரில் நடைபெற்ற ஒரு தாக்குதலில் பலியான ஐ.நா. உயர் அதிகாரி Sergio Vieira de Mello அவர்களின் நினைவாக, இவ்விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.